ரவுடியிசம், வன்முறை என வாழ்க்கையை நகர்த்தும் விஜய் சேதுபதி, எதிர்பாராத ஒரு சூழலில் ஒரு சிறுவனிடம் சிக்கிக் கொள்கிறார். அந்தச் சிக்கலின் பின்னணி என்ன? சிறுவன் சாய் எப்படி அவரை எதிர்கொள்கிறான்? என்ற கேள்விகளுக்கான பதில்களை பள்ளிக்கூடத்தின் ஒரு கழிவறைக்குள் வைத்து சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.
வழக்கமான ரவுடி கதாபாத்திரங்களைத் தாண்டி, விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்னொரு வித்தியாசமான பரிமாணத்தைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக கழிவறைக்குள் சிக்கிக்கொண்ட பிறகு அவர் காட்டும் மிரட்டலும், தப்பிக்க முயலும் தருணங்களும் படத்தின் முக்கியமான பலமாக அமைந்திருக்கின்றன.
சிறுவன் சாய் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். பல காட்சிகளில் அனுபவம் வாய்ந்த நடிகர்களுக்கு இணையாக தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். லிஜோமோல் ஜோஸ், அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
இசையில் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு மென்மையான உணர்வை வழங்கியிருக்கிறார். செல்வகுமார் எஸ்.கே-வின் ஒளிப்பதிவு காட்சிகளின் தன்மையை அழகாகப் பதிவு செய்கிறது. ஆடை வடிவமைப்பு மற்றும் கலை இயக்கமும் படத்தின் காலகட்ட உணர்வை வலுப்படுத்துகின்றன.
மிகவும் எளிமையான ஒரு ஒன்லைனை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியிருப்பது இயக்குநர் பாலாஜி தரணிதரனின் முக்கியமான பலம். வன்முறையைப் பெருமைப்படுத்தாமல், அதன் விளைவுகளையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் அழுத்தமாகப் பேசுகிறது படம்.
பெரிய கதைக்களம் இல்லாமலேயே, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களின் செயல்பாடுகள் மூலம் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஈர்க்க முடியும் என்பதை நிரூபிக்கும் படைப்பு.
மொத்தத்தில், பழைய கால சினிமாவின் மணத்துடன், இன்றைய பார்வையாளர்களுக்கான புதிய அனுபவமாக அமைந்திருக்கிறது இந்தப் படம்.



