மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா, ‘பத்தா’ மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது.
ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருப்பது படத்தின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது. ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்களில் இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி, தற்போது ‘பத்தா’ மூலம் மீண்டும் இணைந்துள்ளது.
விழாவில் பேசிய பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, ‘பத்தா’ திரைப்படம் தனக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும், வாழ்க்கையின் சிக்கல்களை அன்புடனும் அறிவுடனும் அணுகுவது குறித்து படம் பேசுவதாகவும் தெரிவித்தார். இயக்குநர் பாலாஜி தரணிதரனுடனான தனது நீண்டகால நட்பையும், தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டத்தில் அவர் தனக்கு அளித்த ஆதரவையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
பாடலாசிரியர்கள் தமிழ் மற்றும் கானா ஜானி ஆகியோரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். ‘பத்தா’ மூலம் வித்தியாசமான பாடல் வரிகளை எழுதும் வாய்ப்பு கிடைத்ததாக தமிழ் தெரிவித்தார். கானா ஜானி, இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் மூலம் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்ததாகவும், விஜய் சேதுபதியின் ரசிகர் என்பதால் இந்த வாய்ப்பு தனக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்ததாகவும் கூறினார்.
கலை இயக்குநர் முத்துராஜ் பேசுகையில், ‘பத்தா’ படத்திற்காக 1980-களின் சென்னையை தனி உலகமாக உருவாக்கியதாக தெரிவித்தார். அக்காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் செட்களை உருவாக்க படக்குழு நீண்ட காலம் உழைத்ததாகவும், டிரெய்லரில் இடம்பெற்றுள்ள பாக்ஸிங் காட்சிகளுக்கான பொருட்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எடிட்டர் ஆர். கலைவாணன், வழக்கமான கமர்ஷியல் படங்களைப் போல இல்லாமல் ‘பத்தா’ படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கவனமாக அணுக வேண்டியிருந்ததாக தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் செல்வகுமார், இயக்குநர் பாலாஜி தரணிதரனின் கதை மற்றும் படத்தின் உலகத்தை திரையில் கொண்டுவருவதில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். மேலும், விஜய் சேதுபதியின் நடிப்பில் இருந்த அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டிப் பேசினார்.
தயாரிப்பாளர் அஜித் அந்தாரே, தமிழ் சினிமாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருப்பதாகக் குறிப்பிட்டார். பாலாஜி தரணிதரனின் கதை சொல்லும் விதம் தங்களை வெகுவாக கவர்ந்ததாகவும், அதனாலேயே ‘பத்தா’ பயணத்தில் இணைந்ததாகவும் தெரிவித்தார். தயாரிப்பாளர் முராத் கெதானியும் ‘பத்தா’ தங்களுக்கு மிகவும் முக்கியமான படம் என்றும், இது Cine1 Studios நிறுவனத்தின் முதல் தமிழ் படம் என்றும் கூறினார்.
பாடலாசிரியர் விவேக், ‘பத்தா’ படத்தின் மையத்தில் உறவுகளின் முக்கியத்துவம் இருப்பதாகக் குறிப்பிட்டார். இயக்குநர்கள் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதி மற்றும் அட்லி ஆகியோருடனான தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
நடிகை லிஜோமோல் ஜோஸ், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது தனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்ததாக தெரிவித்தார். படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ‘பத்தா’ படத்தின் கதையை எழுதத் தொடங்கியதாக தெரிவித்தார். முதலில் விஜய் சேதுபதியிடம் கதையைச் சொன்னதாகவும், பின்னர் அட்லி மற்றும் தயாரிப்பாளர்களிடம் கதை சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். படத்தின் கதைக்கேற்ப தனித்துவமான உலகத்தை உருவாக்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், அட்லி மூலம் இந்தப் படத்தில் இணைந்ததாகவும், பாலாஜி தரணிதரனுடன் பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார். விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை ‘பத்தா’ மூலம் நிறைவேறியதாகவும் அவர் கூறினார்.
விழாவின் முக்கிய அம்சமாக விஜய் சேதுபதியின் பேச்சு அமைந்தது. பாலாஜி தரணிதரனுடனான தனது நீண்டகால நட்பு குறித்து பேசிய அவர், ‘பத்தா’ வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். லிஜோமோல் ஜோஸ், சாய் அப்யங்கர் உள்ளிட்ட படக்குழுவினரின் பணியையும் அவர் பாராட்டிப் பேசினார்.
இயக்குநர் அட்லி பேசுகையில், ‘பத்தா’ தனக்கு ஒரு சாதாரண திரைப்படம் மட்டுமல்ல என்றும், மனிதநேயத்தையும் உறவுகளையும் பேசும் அதே நேரத்தில் புதிய விதமான பொழுதுபோக்கு அனுபவத்தையும் வழங்கும் திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். பாலாஜி தரணிதரனின் தனித்துவமான கதை சொல்லும் திறனைப் பாராட்டிய அவர், சாய் அப்யங்கரின் இசைப் பயணத்துக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். செல்வகுமார் SK ஒளிப்பதிவு செய்ய, ஆர். கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார். அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து ‘பத்தா’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
ரசிகர்களின் உற்சாகத்துடன் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவும், படக்குழுவினர் பகிர்ந்துகொண்ட தகவல்களும் ‘பத்தா’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.



