வங்கிகள் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவியை அதிகரிக்க வேண்டும்

நபார்டு வங்கி 36வது ஆண்டு மற்றும் சுய உதவி க்குழுக்கள் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விவசாய வளர்ச்சிக்காகவும், ஊரக மேம்பாட்டுக்காகவும் கடந்த 35 ஆண்டுகளாக சீரிய முறையில் பங்காற்றி வரும் நபார்டு என்கிற தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் 36ஆவது ஆண்டு துவக்க விழா மற்றும் சுய உதவிக் குழுக்களை வங்கிகளுடன் இணைக்கும் திட்டத்துக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த தருணத்தில் நபார்டு வங்கிக்கு என் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ்நாட்டின் விவசாய கட்டமைப்புகளை மேம்படுத்தி விவசாய பெருமக்களின் வளர்ச்சிக்கும், கிராமப் பெண்களுடைய வாழ்வின் மலர்ச்சிக்கும் செயல்படுத்தப்பட்ட தமிழக அரசின் திட்டங்களில், அரசுடன் இணைந்து நபார்டு வங்கி ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.  கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்கடனுக்கு நபார்டு வங்கி மறுநிதியுதவி அளித்து வருகிறது. கிராமச்சாலைகள் முதல் பாடசாலைகள் வரை, கால்நடை மருத்துவ மையங்கள் முதல் மீன்பிடி துறைமுகங்கள் வரை, விவசாயக் கூட்டுறவு சங்கங்கள் முதல் பொது விநியோக கிடங்குகள் வரை அனைத்து விதமான கிராம முன்னேற்றத்துக்கான திட்டங்களிலும் நபார்டு வங்கி தனது ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வரை கடனுதவி அளித்து வருவதை நான் இங்கே மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இத்திட்டத்தில் அதிக நிதியுதவி பெறும் மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சுய உதவிகுழுக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தும் வகையில் சுய உதவிக்குழுக்களை வங்கிகளோடு இணைக்கும் திட்டத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய வங்கிகளின் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இங்கே விருதுகள் வழங்கப்படுகின்றன.  விருது பெறும் வங்கிகளுக்கு என் வாழ்த்துக்கள். வங்கிகள் மூலமாக பயன் பெற்ற லட்சக்கணக்கான சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிவரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் வங்கிகள், தொண்டு நிறுவனங்கள், நுண்கடன் நிறுவனங்கள், உள்ளிட்ட அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இந்தத் தருணத்தில், தமிழ்நாட்டின் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் வாங்கிய வங்கிக் கடனை தவணை தவறாமல் திருப்பிச் செலுத்தி வருகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். அதே சமயம், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் தற்போதுள்ள கடனுதவி 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ளது. இதில் வங்கிகளின் பங்களிப்பு 6300 கோடி அளவில்தான் உள்ளது என்பது கவனிக்கத் தக்கது. வரும் ஆண்டுகளில் அனைத்து வங்கிகளும் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடனுதவியை அதிகரித்து, வங்கிகளின் பங்களிப்பை பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.