பலம் – சினிமா விமர்சனம்

நாயகன் ஹிருத்திக் ரோஷன் பார்வையற்றவர். இருந்தும், இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். காதால் கேட்டு, அந்த கதாபாத்திரத்து ஏற்ப டப்பிங் கொடுக்கும் திறமை பெற்றவர். இவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெறும்போது, கண் தெரியாத யாமி கவுதமின் அறிமுகம் கிடைக்கிறது. தனக்கு கண் தெரியாத சூழலில் கண் தெரியாத ஒருவரை எப்படி திருமணம் செய்துகொள்வது என்று யாமி கவுதம் யோசிக்கிறார். ஆனால், ஹிருத்திக் ரோஷன் அவளிடம் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இருவருடைய திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அரசியல் பிரமுகர் ஒருவரின் தம்பியால் இவர்கள் குடும்பத்துக்குள் பிரச்சனை ஆரம்பிக்கிறது.  அந்த அரசியல் பிரமுகரின் தம்பி இவர்கள் இருவருக்கும் கண் தெரியாது என்பதை அறிந்துகொண்டு, ஒருநாள் ஹிருத்திக் ரோஷன் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து யாமி கவுதமை பலாத்காரம் செய்துவிடுகிறார். இதுகுறித்து அறிந்த ஹிருத்திக் ரோஷன் போலீஸ் நிலையத்தை நாடுகிறார். போலீசோ அரசியல் புள்ளியின் தம்பி இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளாமல், அதற்குண்டான ஆதாரங்களையெல்லாம் அழித்துவிடுகிறார்கள்.  இதனால், மனமுடைந்த ஹிருத்திக் ரோஷன் வீட்டில் ரொம்பவும் மவுனமாகவே இருக்கிறார். தன்னை இரண்டு பேர் கற்பழித்துவிட்டார்கள் என்பதால்தான் ஹிருத்திக் ரோஷன் அதுபோல் இருப்பதாக நினைக்கும் யாமி கவுதம், அவனிடமிருந்து பிரிந்து செல்வதாக கூறுகிறாள். அதற்கும் ஹிருத்திக் ரோஷன்  அமைதியாகவே இருக்கிறார்.  மறுநாள், ஹிருத்திக் ரோஷன் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பும்போது யாமி கவுதம் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துகிடக்கிறாள். அவள் ஏன் தற்கொலை செய்துகொண்டாள் என்று யோசிக்கும் ஹிருத்திக் ரோஷனுக்கு அடுத்தடுத்து கிடைக்கும் தகவல்கள் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இறுதியில், அவள் எதற்காக தற்கொலை செய்துகொண்டாள்? தனது மனைவியை பலாத்காரம் செய்தவர்களை ஹிருத்திக் ரோஷன் கண் தெரியாத சூழ்நிலையில் எப்படி பழிவாங்கினார்? என்பதே மீதிக்கதை.  ஹிருத்திக் ரோஷன்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. அவருடைய சினிமா பயணத்தில் இந்த படத்தில்தான் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. படத்தின் ஆரம்பத்தில் ஹிருத்திக் பயங்கரமான டான்ஸ் ஒன்றை ஆடியிருப்பார். கண் தெரியாத ஒருவரால் கவனம் சிதறாமல் சிறப்பாக ஆடமுடியும் என்பதை இந்த பாடலில் ஆடி நிரூபித்திருப்பார் ஹிருத்திக். அந்த பாடலில் இவருடைய ஆட்டத்தை பார்க்கும்போது நமக்கு மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்தமுறை ஹிருத்திக் ரோஷனுக்கு ஹிட் படம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தோடு இந்த படம் வெளிவந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்பு இருப்பதால், ரசிகர்கள் தனது ஹீரோவை மாஸாக பார்க்கத்தான் எண்ணுவார்கள். ஆனால், ஹிருத்திக் அதையெல்லாம் உடைத்தெறிந்து எந்தவித அலட்டலும் இல்லாமல், ஒரு எதார்த்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருப்பது துணிச்சலான காரியம்தான். அவருடைய துணிச்சல் கண்டிப்பாக கைகொடுத்திருக்கிறது எனலாம்.  யாமி கவுதம் கண் தெரியாதவராக வந்தாலும் பார்க்க அழகாகவே இருக்கிறார். செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. ஹிருத்திக்-யாமி கவுதம் இருவருக்குமுண்டான காதல் காட்சிகளும் அழகாக இருக்கிறது. மற்றபடி, படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.  இயக்குனர் சஞ்சய் குப்தா, ஹிருத்திக் ரோஷனுடன் முதன்முதலாக கைகோர்த்திருக்கிறார். இந்திய சினிமாவுக்கு அதரபழசான பழிவாங்கும் கதை என்றாலும், அதை எப்படி மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார் என்பது பெரிய ஆவலாக இருந்தது. அந்த ஆவலை பூர்த்தி செய்திருக்கிறார். சஞ்சய் குப்தா, கொரியன் படங்களை தழுவியே பெரும்பாலான படங்களை எடுத்திருக்கிறார்.  அதேபோல் இந்த படத்தையும் ரொம்பவும் திரில்லிங்காகவே கொண்டு போயிருக்கிறார். பழிவாங்கும் கதைகளுக்கு உண்டான வழக்கமான காட்சியமைப்புகளே இருப்பதால், தொடர்ந்து ரசிக்கமுடியவில்லை. முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி கொஞ்சம் விறுவிறுப்படைகிறது.  ராஜேஷ் ரோஷன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். பழைய கிளாசிக் பாடல்களை ரீமேக் செய்திருப்பது பெரிதாக எடுபடவில்லை. படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. சுதீப் சாட்டர்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.