இளைய திலகம் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் “அழகிய லைலா” படபிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்த ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் டாக்டர். விக்ரம் PSJ

 ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் “அழகிய லைலா.

 முக்கிய வேடத்தில் இளைய திலகம் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்கிறார்கள். C.சத்யா – இசையமைப்பாளர், வினோத் பெருமாள்- ஒளிப்பதிவாளர்,

கிரேசன்- படத்தொகுப்பாளர், முஜிபூர் ரகுமான் – கலை இயக்குனர், 

எம்.சண்முகவேல் – நிர்வாகத் தயாரிப்பாளர் , வினு – தயாரிப்பு நிர்வாகி.

முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னை அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள நாச்சியார் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில் இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது.

 இளைய திலகம் பிரபு பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோரும் கேரளாவில் இருந்து வந்திருக்கிறார்கள். மலையாளத்தில் படங்களை தயாரித்திருக்கிறார்கள். இயக்குனர் ரெஜித் மலையாளத்தில் முதல் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழில் அவருக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை நான் கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே, இயக்குனர் தயாரிப்பாளரிடம் கதையை சொல்லி…. கதை அவருக்கு பிடித்துப் போனது. அதன் பிறகு என்னை அணுகினார்கள்.

ஒன்றரை மணி நேரம் சிரித்துக்கொண்டே கதையை கேட்டேன். அதன் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்தப் படம் நகைச்சுவை திரைப்படமாக உருவாகிறது. சின்ன மாப்ளே, தேடினேன் வந்தது என்று பல நகைச்சுவை படங்களில் நடித்திருக்கின்றேன். அந்த வரிசையில் இந்த படமும் மிகப்பெரிய நகைச்சுவை படமாக இருக்கும். 

என்னுடைய தந்தைக்கு எப்படி ஆதரவு அளித்தீர்களோ… அதுபோல எனக்கும் நீங்கள் ஆதரவளித்தீர்கள். அதுபோல் என் மகன் விக்ரம் பிரபுவுக்கும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த படக்குழுவுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு நல்ல கலைஞர்களை எப்போதும் வரவேற்று அவர்களை கொண்டாடி இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிகர்களை கொண்டாட வேண்டும். 

இந்த படம் தமிழில் மட்டும் தான் தயாராகிறது. கேரளாவிலும் இந்த படம் தமிழில் தான் வெளியாகும். கேரளாவில் உள்ள மக்கள் தமிழ் நன்கு அறிவார்கள். நான் நடித்த சின்னத்தம்பி படம் 100 நாட்களுக்கு மேல் அங்கு ஓடியது. 

அதேபோல தமிழ் நன்றாக பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தமிழ் படங்கள் நேரடியாகவே அங்கு வெளியாகிறது. அங்கு மக்களிடம் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுபோல இந்த படமும் கேரளாவிலும் வெளியாகும்” என்று நடிகர் பிரபு கூறினார். 

தயாரிப்பாளர் ஏ.ஆர்.மதியழகன் கூறும்போது, “இந்த படம் நகைச்சுவை படம். எனக்கு ரொம்ப பிடித்த கதை. பிரபு சார் நடித்தால் நல்லா இருக்கும் என்று பேசினோம். அதன்படி பிரபு சார் அவர்களை அணுகி கதையைச் சொல்லி அவரை நடிக்க வைக்கிறோம். 

சினிமா உலகில் அவர் மிகப்பெரிய லெஜன்ட். நல்ல கலாச்சாரம், நல்ல பண்பாடு கொண்டவர். இந்த மாதிரி கதையில் அவர் நடிப்பது எங்களுக்கு பெரிய பெருமை. அவர் நடிப்பது எங்களுக்கு கிடைத்த வரம்” என்று கூறினார்.