‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளி வெங்கட் உள்ளிட்ட படக்குழுவினர் இதில் பங்கேற்றனர்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சமூகப் பின்னணியில் உருவாகியுள்ளது. வரும் 17-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நிகழ்ச்சியில் பேசிய காளி வெங்கட், சாலை வசதியற்ற மலைப்பகுதிகளில் நடைபெற்ற கடினமான படப்பிடிப்பு அனுபவங்களையும், படத்தின் சமூகக் கருத்தையும் பகிர்ந்தார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், கல்வி உரிமையை மையமாகக் கொண்ட இப்படம் பார்வையாளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இப்படத்தை வெளியிடுவதில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

பேபி கிருத்திகா, தனது முதல் படத்திலேயே முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து, ரசிகர்கள் ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். ரம்யா பாண்டியன், கதையின் கரு தன்னை மிகவும் கவர்ந்ததால் இப்படத்தில் நடித்ததாகவும், படப்பிடிப்பு நடைபெற்ற மலைப்பகுதி மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன், இது கல்வி உரிமையை பேசும் முக்கியமான திரைப்படம் என்றும், அருள்நிதி, ஆரவ், பேபி கிருத்திகா உள்ளிட்ட அனைவரின் அர்ப்பணிப்பும் படத்தின் பலமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

அருள்நிதி, மாவட்ட ஆட்சியர் ‘முத்துவேல்’ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், குழந்தைகளின் கல்வி குறித்து பேசும் இப்படம் அனைவரையும் சிந்திக்க வைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஆரவ், தனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத கதாபாத்திரமாக இது அமையும் என்றும், காளி வெங்கட்டின் நடிப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறினார்.