ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. 544 அங்கன்வாடி பணியாளர், 95 குறு அங்கன்வாடி பணியாளர், 475 அங்கன்வாடி உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி நகர்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஜின்பாக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியிலும், புறநகர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தேர்வு நடைபெற்றது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலககத்திலும் நேர்முகத்தோவு நடைபெற்றது. இதில் ஊனமுற்றோர், விதவைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உடனடியாக ஆள்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணி ஆணை உடனடியாக தனித்தனி வாகனங்கள் மூலம் அன்ற இரவோடு இரவாக அவர்களது வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுவுள்ளதாகவும், தகுதி உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதி இல்லதாவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறி பெண்கள் பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டுராமன் தலைமையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது வழங்கப்பட்டுள்ள பணி ஆணையை ரத்து செய்து, விசாரணை நடத்த வேண்டும் , இல்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்ல உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.