மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம் கடந்த ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் படக்குழுவினர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு, படத்தின் உருவாக்கம் மற்றும் வெற்றி குறித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பாடலாசிரியர் முத்தமிழ் பேசுகையில், ‘தொடுவானம்’ பாடலை எழுதும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பாடலாசிரியர் பாக்கியம் சங்கர், இயக்குநர் பாரி இளவழகன் தன்னை தொடர்பு கொண்டு, மனதில் நிற்கும் பாடல் வேண்டும் என்று கேட்டதாகவும், வடசென்னையை பின்னணியாகக் கொண்டிருந்தாலும் வழக்கமான வன்முறை இல்லாமல் அழகான காதல் கதையை படமாக்கியிருப்பது படத்தின் சிறப்பு என்றும் கூறினார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணையும் தனது நான்காவது படம் இது என்றும், அந்நிறுவனத்தின் படங்கள் தொடர்ந்து அன்பை மையமாகக் கொண்ட கதைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் சத்யா காரிகாலன், நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு இது முதல் திரைப்படம் என்றும், சினிமா பயணத்திற்கு வழிகாட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். காதல், சமத்துவம் மற்றும் தனிமனித சுதந்திரம் போன்ற கருத்துகளை நகைச்சுவையுடனும் எளிமையாகவும் இப்படம் பேசியிருப்பதாகக் கூறினார்.
நடிகர் பரிதாபங்கள் கோபி, படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கும், படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், படத்தின் வெற்றிக்கு இயக்குநர் பாரி இளவழகனின் எழுத்தும் இயக்கமுமே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.
சென்னை விநியோகஸ்தர் வம்சி பேசுகையில், ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட விநியோகப் பயணத்தைத் தொடங்கியதாகவும், படம் வெளியான இரண்டாவது வாரத்திலேயே தனது முதலீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
கலை இயக்குநர் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், படத்தொகுப்பாளர் பார்த்தா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் படத்தின் வெற்றிக்கு காரணமான அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.
இசையமைப்பாளர் பரத் சங்கர், தன்னை நம்பி வாய்ப்பு வழங்கிய இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், பாடலாசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரையும் பாராட்டினார். படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை பாராட்டிய ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நடிகை ரம்யா ரங்கநாதன் பேசுகையில், ‘மேஜிக்’ கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், திரையரங்குகளில் ரசிகர்கள் படத்தை கொண்டாடிய தருணங்கள் மறக்க முடியாதவை என்றும் தெரிவித்தார். குறிப்பாக, ரசிகர்கள் தன்னை ‘மேஜிக்’ என்று அழைத்தது மிகப்பெரிய அங்கீகாரம் எனக் கூறினார். மேலும், படத்தின் வெற்றிக்கு ஊடக நண்பர்களின் ஆதரவு முக்கிய காரணமாக இருந்ததாகவும் நன்றி தெரிவித்தார்.
நடிகர் சுதர்சன், இயக்குநர் பாரி இளவழகன், தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்ததுடன், தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகக் கூறினார்.
இயக்குநர் பாரி இளவழகன் பேசுகையில், இப்படத்தின் வெற்றிக்கு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவு மிக முக்கியமானது என்று தெரிவித்தார். தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ் தன் எழுத்து மற்றும் இயக்கத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து சுதந்திரம் வழங்கியதாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பே படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் கூறினார். மேலும், படத்தின் வெற்றிக்கு துணைநின்ற ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
தயாரிப்பாளர் யுவராஜ், ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் வெற்றி நடிகர்கள் மற்றும் இயக்குநருக்கு மட்டுமல்லாமல், திரைக்குப் பின்னால் உழைத்த நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சொந்தமானது என்று தெரிவித்தார். படத்தை ஆதரித்து திரையரங்குகளுக்கு வந்த ரசிகர்கள் மற்றும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
‘அன்பே டயானா’ திரைப்படம் சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள கிராஸ்-கல்ச்சுரல் லவ் ஸ்டோரி ஆகும். பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார். ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். பார்த்தா படத்தொகுப்பையும், மகேந்திரன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். மோகன்ராஜன், முத்தமிழ் மற்றும் பாக்கியம் சங்கர் பாடல்களை எழுதியுள்ளனர்.
கடந்த ஜூலை 17, 2026 அன்று வெளியான ‘அன்பே டயானா’ திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


