கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. Drumsticks Productions மற்றும் Zee Studios இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிக்க, அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ளார். ஒரு வழக்கை மையமாகக் கொண்டு நீதிமன்றப் பின்னணியில் திரில்லர் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில் மிஷ்கின், கீர்த்திக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞராக நடித்துள்ளார். நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம் மற்றும் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பிரவீன் S. விஜய், கீர்த்தி சுரேஷை மனதில் வைத்தே இப்படத்தின் கதையை எழுதியதாகவும், அவரும் மிஷ்கினும் தாம் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடித்து கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். மிஷ்கின் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்டகால ஆசை என்றும், இந்தப் படத்தின் மூலம் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டதாகவும் கூறினார். மிஷ்கின் பேசும்போது, இயக்குநர் பிரவீன் குழந்தை போன்ற மனம் கொண்டவர் என்றும், படப்பிடிப்பில் அனைவரையும் குடும்பத்தினரைப் போல அன்புடன் கவனித்துக்கொண்டதாகவும் பாராட்டினார். கீர்த்தி சுரேஷின் நடிப்புத் திறமையைப் பாராட்டிய அவர், இன்னும் பல ஆண்டுகள் அவர் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடிக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், இயக்குநர் பிரவீன் தனக்கு சகோதரரைப் போன்றவர் என்றும், மிஷ்கினுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்தார். நீதிமன்றப் பின்னணியுடன் குற்றப் புலனாய்வு அம்சங்களும் நிறைந்த திரில்லர் படமாக ‘சத்தியவான் சாவித்திரி’ உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். இசையமைப்பாளர் சாம் C.S. படத்தின் திரைக்கதை மிகவும் பிடித்திருந்ததாகவும், நீதிமன்றக் காட்சிகள் மட்டுமின்றி குடும்ப உணர்வுகள், சஸ்பென்ஸ், கொலை மர்மம் எனப் பல அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறினார். ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் இணைந்து நடித்த நீதிமன்றக் காட்சிகளை அழகாகப் படமாக்கிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். நடிகைகள் பிரிகிடா, ஷில்பா மஞ்சுநாத், நடிகர் சாருகேஷ் ஆகியோரும் தங்களது படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S. சக்திவேல், கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் போன்ற திறமையான கலைஞர்கள் இப்படத்தில் இணைந்ததே படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்ததாகக் குறிப்பிட்டார். Drumsticks Productions நிர்வாக இயக்குநர் விவேக், படத்திற்கு ஆதரவளித்த Zee Studios, Zee5, Zee Tamil மற்றும் T-Series நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். G.K. பிரசன்னா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரில்லர் அனுபவத்தை வழங்கும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


