இண்டிகோ விமான நிறுவனம், ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடனில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்காக நிதி அமைச்சர் தலைமையில் பிரத்யேக குழு அமைக்கப்படும். இந்த குழு பங்குகளை விற்பதற்கான காலத்தையும் வழிமுறைகளையும் உருவாக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக விமான போக்குவரத்து துறை செயலர் ஆர்.என் ஷாயுபே தெரித்து உள்ளார். மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுவனங்களிடமும் ஏர் இந்தியா பங்குகள் விற்பனை குறித்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் ஷாயுபே தெரிவித்தார். இம்மாத தொடக்கத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உதவியுடன் டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதாக செய்திகள் வெளியாகியது.