பயிர்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை அதிகரித்து வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டத்தில் பேசிய அய்யாக்கண்ணு, ரூ.1748 கோடியை அடுத்த வருடம் பயிர் செய்வதற்கு கொடுக்கிறார்கள். அழிந்துபோன எங்களுடைய பயிருக்கு ஏன் நஷ்ட ஈடு கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும், சேப்பாக்கத்தில் போராட்டம் செய்வதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாகவும், அனுமதி அளிக்காமல் கைது செய்தால், டெல்லியில் நடந்தது போன்று நிர்வாண போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தார்.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் வாலாஜாபாத் சாலையில், போக்குவரத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருவதால், முக்கிய இடங்களில் போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.