புது திறமையாளர்கள் சினிமாத் துறையில் புது அலையை உருவாக்குகிறார்கள்

 

புது திறமையாளர்கள் சினிமாத் துறையில் புது அலையை உருவாக்குகிறார்கள்!

சென்னையைச் சேர்ந்த தெலுங்கு கலைஞரான செருகுரி மானசா சௌத்ரி சினிமாவில் தனது அழுத்தமான முத்திரையப் பதித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த மானசா சினிமா மீது தீராத ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் பெரும் கனவுகளைக் கொண்டவர்.

சிறுவயதில் இருந்தே ஸ்கேட்டிங்கில் அதிக ஆர்வம் கொண்டவரான மானசா தன்னுடைய பத்து வயதில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியனாகத் திகழ்ந்தார். அவரது இந்த ஆரம்பகால சாதனைகள் சினிமாத் துறைக்குள் நுழைவதற்கு வழி வகுத்தது என்றால் அது மிகையில்லை.  

தேசத்திற்குச் சேவை செய்வதில் உள்ள ஆர்வத்தால், மானசா கப்ஸ் மற்றும் புல்புல்ஸ், ஸ்கவுட்ஸ் மற்றும் கைட்ஸ், ஆர்எஸ்பி, என்எஸ்எஸ் மற்றும் என்சிசி உள்ளிட்ட பல்வேறு இளைஞர் அமைப்புகளில் இளம் வயதில் இருந்தே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். என்சிசியில் டிஎஸ்சி டெல்லி ரிட்டர்ன் கேடட்டாக, துப்பாக்கிச் சூட்டில் தங்கப் பதக்கத்தைப் பெற்றது அவரது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

மானசாவின் கல்விப் பயணமும் சுவாரசியமானது. எத்திராஜ் கல்லூரியில் ஆங்கிலத்தில் பிஏ படித்தார் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. முடித்தார். ஆங்கில இலக்கியம் படித்திருந்த போதிலும் மானசாவின் கனவு எப்போதும் மாடலிங் மற்றும் நடிப்பை நோக்கியே இருந்தது. மாடலிங் உலகிற்குள் அவர் 16 வயதிலேயே நுழைந்தார். அவரது குடும்பத்தினர், கல்லூரி விரிவுரையாளர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் முழு ஆதரவும் அன்பும் அவருக்கு இருந்தது.

நீச்சல், ஸ்கேட்டிங், துப்பாக்கி சூடு மற்றும் நடனம் எனப் பல்வேறு திறமைகளை மானசா கொண்டுள்ளார். ரவிகாந்த் பெரும்பு இயக்கிய ‘பப்பில்கம்’ படத்தில் ரோஷன் கனகலாவுடன் இணைந்து நடித்திருப்பார். தெலுங்கில் இதுதான் அவரது அறிமுகப்படம். அறிமுகப்படத்திலேயே ஏராளமான ரசிகர்களைப் பெற்றார் மானசா. இது அவரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது மட்டுமின்றி மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், பல திறமைகள் மூலம் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தீராத ஆர்வம் கொண்டவரான மானசா, பாண்டிச்சேரி ஆதிசக்தி தியேட்டர் நடத்திய நடிப்புப் பட்டறைகளில் தீவிரமாக பங்கேற்று, தனது நடிப்புத் திறமையை மேலும் மெருகேற்றியுள்ளார். சினிமா மீதான தனது காதல் மற்றும் திறமையின் மீது நம்பிக்கைக் கொண்டு சினிமாவில் தான் முக்கியமான ஒரு இடத்தைப் பிடிக்க விரும்புகிறார். இனிவரும், ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரங்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தையும் தனித்துவமான பாணியையும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளார் மானசா. சினிமாத் துறையில் திறமை, உறுதிப்பாடு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கிய அவரது பயணம் உற்சாகமானதாக உள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மானசா.