பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தன்னை மாற்றிகொன்டாரா ஜித்தன் ரமேஷ்..? ; புதிருக்கு விடை சொல்லும் மலையாள இயக்குநர்

ஜித்தன் ரமேஷ்.. யார் இவர் என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் எல்லாம் அள்ளிக்கவேண்டிய தேவையில்லை. தனது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமாகி இருந்த இவர், தற்போது நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் அறிமுகமான செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகன், நடிகர் ஜீவாவின் சகோதரர், அவ்வளவு ஏன் ஜித்தன் என்கிற படம் மூலமே அடையாளப்பட்டு வந்த ரமேஷ், இனி பிக்பாஸ் ஜித்தன் ரமேஷ் ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்டுள்ளார்.

ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்தும் அவரது அறியப்படாத பக்கங்கள் குறித்தும் மலையாள திரையுலகில் பணியாற்றியவரும் தமிழில் 14 விருதுகளை வென்ற தாய்நிலம் என்கிற படத்தை இயக்கியவருமான இயக்குநர் அபிலாஷ் சில ஆச்சர்ய தகவல்களை கூறுகிறார்

“கடந்த 13 வருடங்களுக்கு முன் நடிகர் ஜீவாவுக்கு கதை சொல்லி வாய்ப்பு பெற்றுவிட வேண்டும் என்கிற உந்துதலில் எப்படியோ சென்னைக்கு வந்து, சூப்பர்குட் பிலிம்ஸ் அலுவலகத்திற்கும் சென்றுவிட்டேன்.. ஆனால் ஜீவா அவுட்டோர் படப்பிடிப்பு சென்றிருந்தார். அப்போதுதான் யதேச்சையாக ஜித்தன் ரமேஷை அங்கே பார்த்தேன்.. எனது கதைக்குப் பொருத்தமான நபராக அவர் இருப்பார் எனத் தோன்றியது. அந்த கதை பற்றி அவரிடம் கூற அனுமதி கேட்டேன்.. என்னிடம் பொறுமையாகக் கதை கேட்ட அவர், இந்தப்படத்திற்கு பட்ஜெட் அதிகம் தேவைப்படுகிறது.. அதனால் சரியான நேரத்தில் இதை படமாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அப்போது ஆரம்பித்த எங்கள் நட்பு இப்போதுவரை தொய்வில்லாமல் தொடர்கிறது.

சில வருடங்களுக்கு முன், எனது நண்பன் இயக்குநர் ஷிபு பிரபாகரின் மலையாளப் படத்தில் ஒரு போலீஸ் கதாப்பாத்திரத்தில் ஒரு தமிழ் நடிகர் வந்தால் நன்றாக இருக்கும் என என்னிடம் கூறினார்.. அதிலும் ஜித்தன் ரமேஷ் வந்தால் சூப்பராக இருக்கும் என்றபோது, அவரை அழைத்தேன். அவர் அப்போது ஜில்லா படத்தின் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருந்த சமயம் என்றாலும் பத்துநாட்கள் எனக்காக, என் நட்பிற்காக வந்து நடித்துக் கொடுத்தார்.

படம் முடியும் வேளையில் அதன் இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னிடம், “தமிழ் நடிகர்கள் என்றால் மண்ணில் வாழ்பவர்கள் அற்புதமான மனம் கொண்டவர்கள் நம்முடைய மலையாள நடிகர்கள் ஜித்தனைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்றனர்.. அந்த அளவுக்கு, மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகன் என்கிற தலைக்கனம் இல்லாமல், ஒரு சாதாரண நடிகனாக, நண்பனாக வந்து, அந்த பத்து நாட்களை திருவிழாபோல கொண்டாடச் செய்தார் ஜித்தன் ரமேஷ்.

அந்தப்படத்தில் பணியாற்றியபோது அவருக்கு படப்பிடிப்பின்போது உதவியாளாராக பணிபுரிந்தார் தாசன் என்கிற ஏழ்மையான இளைஞன் ஒருவர். அவர் தன்னிடம் இருந்த இரண்டு செட் துணிகளையே மாற்றி மாற்றி அணிந்து வந்ததை கவனித்த ஜித்தன் ரமேஷ், படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது, அந்த இளைஞனுக்கு நல்ல உடைகள், விலை உயர்ந்த ஷூக்கள் ஆகியவற்றை வாங்கி கொடுத்ததுடன் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்துச் சென்றார்.

ஜித்தன் ரமேஷை பொருத்தவரை நகைச்சுவையில் எப்போதுமே அவர் அல்டிமேட்.. எப்போதுமே தன்னைச் சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதை ஏனோ அதிக அளவில் அவர் வெளிப்படுத்தவில்லை.. ஒருவேளை அங்குள்ள சூழல் கூட காரணமாக இருந்திருக்கலாம். நான் பார்த்த வரையில், பழகிய வகையில், அவர் ரொம்பவே பாசிட்டிவ் ஆனவர்.. கருணை குணம் அதிகம் கொண்டவர்.

நான் சொன்ன கதையில் நடிக்க அவர் இப்போது தயாராக இருக்கிறார்.

தற்போது ஜீவாவின் படப்பிடிப்பைக் கவனித்துக்கொள்வதற்காக கோவையில் இருக்கும் ஜித்தன் ரமேஷ், இந்த வருடம் இந்தப்படத்தை துவங்கி விடலாம் என நம்பிக்கை அளித்துள்ளார்” என்கிறார் இயக்குநர் அபிலாஷ்.