இந்த படங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் கிடைத்தது என் பாக்கியம் – ஜெயம் ரவி

‘நீ உலகத்தை எப்படி பார்க்கிறாயோ, அப்படி தான் உலகம் உன்னை பார்க்கும்’  என்ற ஒரு சொல்லாடல் இருக்கிறது. ஒரு தனி மனிதன் இதை புரிந்து கொண்டாலே, அது அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறன்களை தானாகவே கண்டுபிடிப்பதற்கான மிகப்பெரிய பாக்கியத்தை அளிக்கிறது. ஜெயம் ரவி 2018 ஆம் ஆண்டில் வேறு வேறு ஜானரில், புது முயற்சிகளில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த இந்த கால கட்டத்தை கடந்து செல்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார் என்பதில் ஐயமில்லை. அவரது சமீபத்திய படமான “அடங்க மறு” வெகுஜன வெற்றியாக  பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அடங்க மறு படத்துக்கு அதிகரிக்கும் திரையரங்குகளை பார்க்கும்போது நிச்சயம் பிளாக்பஸ்டர் என்பது உறுதியாகிறது. மென்மையான மற்றும் அழகான ஹீரோ ஜெயம் ரவி அவரது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். 
 
“நிச்சயமாக, எனக்கு புதிய பரிமாணத்தை வழங்கிய ‘டிக் டிக் டிக்’ மற்றும் ‘அடங்க மறு’ ஆகிய படங்களில் ஒரு பகுதியாக இருந்ததை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். முதலில் என்னை நம்பிய இயக்குனர்கள் சக்தி சௌந்தர்ராஜன் (டிக் டிக் டிக்) மற்றும் கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு சூப்பர்ஸ்டாரும் இந்த படங்களை இழக்க விரும்ப மாட்டார்கள் என்ற அளவில் இந்த படங்களின் திரைக்கதை இருந்தது. ஆனால் இந்த திரைப்படங்களில் முதலிலேயே கதாநாயகனாக என்னை கற்பனை செய்து பார்த்தது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
நிச்சயமாக, நேமிசந்த் ஜபக் சார் மற்றும் சுஜாதா விஜயகுமார் அத்தை போன்ற தயாரிப்பாளர்கள் இல்லையென்றால், இந்த படங்கள் உருவாகியிருக்காது. வெறுமனே வெற்றி கொடுக்கும் உற்சாகத்தை விட, என் அடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்வதில் உள்ள கூடுதல் பொறுப்பை நான் உணர்கிறேன். இந்த  திரைப்படங்கள் மிகப்பெரிய சவால்களை கொண்டிருந்தன, அதை தாண்டி நல்ல படமாக கொண்டு வர தொழில்நுட்ப கலைஞர்கள் கடுமையாக உழைத்தனர். மேலும் இந்த படங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் கிடைத்தது என் பாக்கியம், அவர்கள் தான் என்னை இன்னும் சிறப்பாக நடிக்க உந்தினார்கள்.
 
எல்லாவற்றிற்கும் மேலாக, பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் என் திரைப்படங்களை கொண்டாடினார்கள். அது தான் என்னை பல்வேறு வித்தியாசமான கதைகள் மற்றும் வேடங்களில் தொடர்ந்து நடிக்க ஊக்குவிக்கிறது.