பிரபல நடிகை பாவனா கடத்தல் வழக்கில் மலையாள நடிகர் திலீப், கடந்த மாதம் 10ஆம்தேதி கைது செய்யப்பட்டு, ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சம்மந்தமாக அவரின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனிடமும் விசாரணை நடக்கிறது. இதையடுத்து திலீப், கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் செல்போன் இதுவரை கிடைக்காததாலும், சாட்சிகளை திலீப் கலைக்க வாய்ப்பு உள்ளதாலும் அவருடைய ஜாமீன் மனு கடந்த மாதம் 24ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகர் திலீப் நேற்று கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மீண்டும் முறையீடு செய்து உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
“நடிகை கடத்தலில் தொடர்புடைய பல்சர் சுனிலை நான் நேரில் பார்த்தும் இல்லை, பேசியதும் இல்லை. இந்த கடத்தல் சதி குற்றச்சாட்டில் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. சில போலீஸ் அதிகாரிகள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் எனக்கு எதிராக தவறான தகவல்களை வெளியிட்டு இந்த சதி வலையில் என்னை சிக்கவைத்து உள்ளனர். எந்த தவறும் செய்யாத நான் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. என் மீது இதுவரை எந்த கிரிமினல் குற்றச்சாட்டும் இல்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.