தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ராஜீவ் நகரில் உள்ள ராமராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீடீர் தீவிபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், தீப்பெட்டி பொருள்கள் எரிந்து நாசமானது, அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள ராஜீவ் நகர் 6வது தெருவில் இளங்கோ என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையை சேர்ந்த ராமராஜ் என்பவர் 2இயந்திரங்களை கொண்டு பகுதி நேர இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார்.இன்று காலையில் ஊழியர்கள் வழக்கமாக பணிபுரிந்து கொண்டு இருக்கையில் தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதியில் தீடீரென தீபிடித்து எரிவதை கண்ட அவர்கள் அலறிஅடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதியில் பிடித்த தீ மளமளவென மற்றபகுதிகளுக்கு பரவியது, கோவில்பட்டியில் உள்ள 2 தீயணைப்பு படை வண்டிகள் விரைந்து வந்து தீயணைப்படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் உள்ளே இருந்த சிலிண்டர்கள் வெடிக்கமால் இருக்கும் வகையில் முதலில் அதனை அணைத்தனர்.தொடர்ந்து மற்ற பகுதியிலும் தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் தீப்பெட்டி ஆலை முற்றிலுமாக சேதமடைந்தது. தீப்பெட்டி இயந்திரங்கள், தீப்பெட்டி மூலப்பொருள்கள் என சுமார் 2கோடிரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.