சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கமளிக்க, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், சுப்பிரமணி, பழனியப்பன் ஆகிய 4 பேர் தலைமை செயலகம் வந்தனர். சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு பேரவைச் செயலாளரிடம் 4 அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்தனர். முன்னதாக டிடிவி தினகரன் இல்லத்திற்கு இன்று அவருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கியமான கோரிக்கை. கவர்னர் காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என ஆளுநர் கூறுவது சரியாக இருக்காது. முதலமைச்சர் கூட்டத்தில் 111 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது தவறு. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் யார் யார் என அவர்கள் கூறத்தயாரா? சத்துணவு பணியாளர் பணியிடத்திற்கு கூட அதிக பணம் கேட்கிறார்கள். மீண்டும் விளக்கம் அளிக்க அவகாசம் கோரி உள்ளோம். சபாநாயகர் அளித்த நோட்டீஸ் குறித்து விளக்கம் அளிக்க, மேலும் 15 நாள் அவகாசம் வேண்டுமென கோரியுள்ளோம். தினகரனுடன் ஆலோசித்து, 2 நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கபடும் என கூறினார்.