தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணையை வெளியிட்டது. அப்போது பட்டியல் சாதியினர் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக தேர்தலை நடத்த முடியாமல் போனது. இதனிடையே உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு அதிகாரிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரும் தேர்தலை நடத்தாமல் தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு பல்வேறு காரணங்களை கூறிய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கையும் காரணம் காட்டியது.
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்தக் கோரி சென்னைக்கு உயர் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. அப்போது பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தடையாக இருப்பதாக கூறியது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பாடம் நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வுக்கு உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் மாற்றப்பட்டன.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் அனைவரின் குற்ற பின்னணியையும் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது கடினமான காரியம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து வேட்பாளராக தேர்தெடுக்கப்பட்டவர்களின் குற்றப் பின்னணியை மட்டும் பதிவேற்றினால் மட்டும் போதும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு இம்மாதம் 18ஆம் தேதிக்குள் தேர்தலை அறிவிப்பை வெளியிடவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.