கர்நாடக மின்சாரத்துறை மந்திரி சிவகுமார் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை 4-வது நாளாகவும் இன்றும் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் மந்திரி சிவக்குமாருக்கு சொந்தமான 66 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. இதுவரை சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டத்திற்கு புறம்பாக வரி ஏய்ப்பு செய்து சொத்து சேர்க்கவில்லை என்று மந்திரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டத்தையும், அரசியலமைப்பையும் மீறும் நபர் நான் அல்ல. உண்மை வெளியே வரும். உரிய ஆவணங்கள் கிடைத்த பிறகு நான் பேசுவேன். நாடு முழுவதும் உள்ள எனது கட்சி தலைவர்கள் என் பின்னால் உள்ளனர். எனது கட்சியையும், கட்சி தலைவர்களையும் நான் தலைகுனிய விட மாட்டேன்” என்றார். முன்னதாக, குஜராத்தில் வரும் 8ஆம் தேதி 3 தொகுதிகளுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.க. மிரட்டுவதாக கூறி பெங்களூரில் உள்ள ஈகிள்டன் ரிசாட்டில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேர் கடந்த ஒரு வாரமாக தங்கி உள்ளனர்.
ரிசார்ட்டில் தங்கியுள்ள குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பு மந்திரி சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடன் அவரது சகோதரர் சத்தீஸும் எம்.எல்.ஏ.களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வந்தனர்.