கடும் எதிர்ப்பு காரணமாக சமையல் எரிவாயு மானியம் ரத்து இல்லை

சமையல் எரிவாயுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் இன்று மாநிலங்களவையில் இதனை தெரிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.  இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியதும், சிலிண்டர் மானிய ரத்து குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான், எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது. யாருக்கு மானியம் தேவை, யாருக்கு தேவை இல்லை என்பதை குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். அமைச்சரின் விளக்கம் குறித்து விவாதம் நடத்துவதற்குள், மாநிலங்களவை தேர்தலில் நோட்டா ஓட்டு முறையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவையை மதியம் வரை அவைத்தலைவர் ஒத்தி வைத்தார்.