நிறம் – விமர்சனம்

மருத்துவமனையின் மறைக்கப்பட்ட குற்றங்கள், காதல், கடத்தல், ஆபத்து எனப் பல கிரைம் அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நிறம்’.

படத்தின் தொடக்கத்திலேயே நாயகி தான்யா ஹோப் கடத்தப்படுகிறார். இதற்கிடையில் முகென் மற்றும் ப்ரீத்தி அஸ்ராணி இடையிலான காதல் கதை தனியாகப் பயணிக்கிறது. ஒரு கட்டத்தில் ப்ரீத்தி அஸ்ராணி பணிபுரியும் மருத்துவமனையில் நடைபெறும் முறைகேடுகளையும் குற்றங்களையும் கண்டறிகிறார். இதனால் அவருக்குப் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. காதலியைக் காப்பாற்றுவதற்காக முகைன் களமிறங்குகிறார். இந்தச் சம்பவங்களுக்கும், தொடக்கத்தில் காட்டப்படும் கடத்தலுக்கும் இடையிலான தொடர்பு என்ன? அதன் பின்னணியில் இருக்கும் குற்றவாளிகள் யார்? என்பதற்கான விடைகளை நோக்கிப் பயணிக்கிறது மீதிக்கதை.

முகென் தனது கதாபாத்திரத்தை இயல்பாகக் கையாண்டுள்ளார். குறிப்பாக, ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளில் இன்னும் அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கலாம். காதல் காட்சிகளுக்கான எழுத்தும் காட்சியமைப்பும் கூடுதல் கவனம் பெற்றிருந்தால் அந்தப் பகுதிகளில் முகைன் இன்னும் சிறப்பாகத் தனித்து தெரிந்திருப்பார்.

ப்ரீத்தி அஸ்ராணி படத்தின் முக்கியமான பலம். உணர்ச்சிகளையும் பதற்றத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். தான்யா ஹோப் தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்துள்ளார். நிதின் சத்யாவின் வில்லத்தனமான கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக அமையவில்லை.

டி. இமானின் இசையில் அவரது வழக்கமான தனித்துவமான முத்திரையை இந்தப் படத்தில் அதிகம் உணர முடியவில்லை. பாடல்கள் ஓரளவுக்குக் கைகொடுக்கின்றன. ஒளிப்பதிவில் சிக்கனமான காட்சியமைப்புகள் இடம்பெற்றுள்ளன. படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 

இயக்குநர் பலராம் கிருஷ்ணா பல்வேறு சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் ஒரே புள்ளியில் இணைக்க முயற்சித்துள்ளார். 

கதையின் போக்கில் பார்வையாளர்களுக்கு எழும் பல கேள்விகளுக்கும் தெளிவான, நம்பும்படியான விளக்கங்கள் கிடைக்காதது மிகப்பெரிய பலவீனம். இதனால் கதையின் முக்கியமான திருப்பங்கள்கூட எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. இன்னும் நேர்த்தியான திரைக்கதையும் கூர்மையான படத்தொகுப்பும் இருந்திருந்தால் ‘நிறம்’ ஒரு தரமான கிரைம் த்ரில்லராக மாறியிருக்கக்கூடும்.

படத்தின் அடிப்படையில் இடம்பெற்றிருக்கும் சமூக அக்கறை பாராட்டுக்குரியது. தவறுகளையும் அநீதிகளையும் நேரில் பார்க்கும்போது நல்லவர்கள் அமைதியாக ஒதுங்கிச் செல்வதுதான் சமூகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்ற கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘நிறம்’ – நல்ல கருத்து இருக்கிறது.