4 இடியட்ஸ் – திரைப்பட விமர்சனம்

கொரோனா காலகட்டத்தில் வறுமையில் சிக்கித் தவிக்கும் புகழ் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர், வாழ்க்கையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் போடும் ஒவ்வொரு திட்டமும் எதிர்பாராத சிக்கல்களை உருவாக்குகிறது. அந்தப் பிரச்சனையில் இருந்து இந்த நான்கு பேரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ‘4 இடியட்ஸ்’ படத்தின் மையக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் புகழ், தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, காமெடியைத் தாண்டி சில உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் ஈர்க்கிறது. பிரக்யா நாயன், ரவிமரியா, கும்கி அஸ்வின், வின்சென்ட் அசோகன், இந்திரன் இளங்கோவன், திடியன் திருசெல்வம் உள்ளிட்ட படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.

படத்தின் மற்றொரு பலமாக இசை அமைந்திருக்கிறது. கதையின் சூழலுக்கு பொருத்தமான இசை காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவும் படத்தின் களத்தையும் கதையின் நகர்வையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறது.

காமெடியை முதன்மையாக வைத்துக்கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சஜோ சுந்தர் முருகேசன். சுவாரஸ்யமான கதைக்களம் இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் நேர்த்தியையும் வேகத்தையும் கொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சில இடங்களில் காட்சிகள் சற்று நீளமாகத் தோன்றினாலும், காமெடியுடன் சேர்த்து சொல்லப்படும் சமூகக் கருத்து படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்று, நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக ரசிக்கக்கூடிய காமெடி படமாக ‘4 இடியட்ஸ்’ அமைந்திருக்கிறது. குறைகள் இருந்தாலும், நகைச்சுவையுடன் ஒரு கருத்தையும் சொல்ல முயற்சித்திருப்பதால் இந்த 4 இடியட்ஸுக்கும் ஒரு லைக் போடலாம்!