‘மண்டாடி’ இசை வெளியீட்டு விழா: கடலுக்குள் நடந்த பிரமாண்ட படப்பிடிப்பை பாராட்டிய படக்குழுவினர்

சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள், இந்தப் படம் முழுக்க முழுக்க கடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதையும், அதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் மேற்கொண்ட கடின உழைப்பையும் பகிர்ந்து கொண்டனர். எடிட்டர் பிரதீப் இ. ராகவ், “கடலில் படம் எடுப்பது மிகவும் சவாலானது. பலர் சில காட்சிகளை மட்டும் கடலில் எடுத்துவிட்டு கிரீன் மேட் மற்றும் சிஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் ‘மண்டாடி’ படக்குழு பெரும்பாலான படப்பிடிப்பையும் உண்மையான கடலிலேயே நடத்தியது தயாரிப்பாளரின் சினிமா மீதான ஆர்வத்தை காட்டுகிறது” என்று பாராட்டினார்.

 

நடிகர்கள் மஹிமா, பாலசரவணன், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சூரியின் அர்ப்பணிப்பை வெகுவாக பாராட்டினர். கடலில் நீண்ட நேரம் நடைபெற்ற படப்பிடிப்பின்போதும், காயங்கள் ஏற்பட்ட நிலையிலும் சூரி ஓய்வெடுக்காமல் நடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். நடிகை மஹிமா, “நடுக்கடலில் தினமும் பல மணி நேரம் படப்பிடிப்பு நடத்துவது சாதாரண விஷயமல்ல. ஒளிப்பதிவாளர் கதிர், சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது” என்றார். மேலும், சுஹாஸ் மற்றும் ரவீந்திர விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவில் தங்களுக்கு கிடைத்த முதல் நேரடி தமிழ் திரைப்பட வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

பீட்டர் ஹெய்ன் பேசுகையில், நடுக்கடலில் படமாக்கப்பட்ட படகு துரத்தல் காட்சிகள் ரசிகர்களுக்கு புதிய ஆக்‌ஷன் அனுபவத்தை வழங்கும் என்றும், சுமார் 20 கிலோமீட்டர் நடுக்கடலில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒரு சண்டைக் காட்சியின்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும் சூரி படப்பிடிப்பை தொடர்ந்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியதாக கூறினார். இயக்குநர் மதிமாறன் மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோரின் அர்ப்பணிப்பும், படக்குழுவுக்கு அவர்கள் வழங்கிய முழு சுதந்திரமும் இந்தப் பிரமாண்ட முயற்சிக்கு முக்கிய காரணம் என பலரும் பாராட்டினர்.

 

விழாவில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இயக்குநர் வெற்றிமாறன், ஜூனியர் கலைஞராக தனது திரைப்பயணத்தை தொடங்கி பல ஆண்டுகள் கடினமாக உழைத்து இன்று கதாநாயகனாக உயர்ந்துள்ள சூரியின் பயணத்தை பெருமையாக குறிப்பிட்டனர். விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் அடையாளமாக சூரி திகழ்வதாக அவர்கள் தெரிவித்தனர். இயக்குநர் மதிமாறன், மீனவர்களின் பாரம்பரியமான பாய்மரப் படகுப் பந்தயத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்திற்கு மாநில மற்றும் தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.

 

நடிகர் சூரி பேசுகையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்கள், நடுக்கடலில் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் படகோட்டிகளின் உதவி குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். தனது வெற்றிக்குப் பின்னால் குடும்பத்தினர், குறிப்பாக தனது தாயின் ஆசீர்வாதமும், மனைவி மற்றும் குழந்தைகளின் ஆதரவும் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒருகாலத்தில் வீட்டு வாடகைக்குக் கூட பணமின்றி தவித்த நிலையில் இருந்து இன்று மக்கள் தனது பிறந்தநாளுக்கு போஸ்டர்கள் ஒட்டும் அளவிற்கு வளர்ந்திருப்பது தனது தாயை நெகிழ்ச்சியடையச் செய்ததாக சூரி உருக்கமாக கூறினார். கடல், ஆக்‌ஷன் மற்றும் மனித உணர்வுகளை இணைத்து பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.