பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

காதலிக்கும் இளம் ஜோடி திருமணத்திற்குப் பிறகு எந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற கேள்வியை மையமாக வைத்து, வழக்கமான திருமண முறையை கேள்விக்குள்ளாக்க முயற்சிக்கும் திரைப்படம் தான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.

இளனும் சான்வி மேக்னாவும் காதலிக்க, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால், திருமணம் முடிந்த சில நிமிடங்களிலேயே மணக்கோலத்துடன் சான்வி மேக்னா திடீரென தனது வீட்டை நோக்கி ஓடுகிறார். இதனால் இரு குடும்பங்களும் அதிர்ச்சியடைகின்றன. விசாரிக்கும்போது, பெற்றோரைப் பிரிந்து கணவர் வீட்டுக்குச் செல்ல மனமில்லாததே காரணம் என்பது தெரிய வருகிறது.

‘திருமணத்திற்குப் பிறகு பெண் மட்டும் ஏன் கணவர் வீட்டுக்குச் செல்ல வேண்டும்? கணவரே மனைவி வீட்டில் வந்து வாழலாமே?’ என்ற கேள்வியை முன்வைக்கும் சான்வி மேக்னா, தனது விருப்பத்தில் உறுதியாக நிற்கிறார். ஆரம்பத்தில் இதற்கு தயங்கும் இளன், பின்னர் மனைவியின் விருப்பத்தை ஏற்று மாமியார் வீட்டிலேயே வசிக்கத் தொடங்குகிறார். அதன்பிறகு தொடங்கும் குடும்பச் சிக்கல்களையும், கணவன் எதிர்கொள்ளும் சூழல்களையும் நகைச்சுவையுடன் சொல்ல முயற்சிக்கிறது படம்.

‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற இளன், இந்தப் படத்தில் ஹீரோவாகவும் களமிறங்கியிருக்கிறார். நடிகராக அவர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால், இயக்குநராக அவர் கையாண்டிருக்கும் திருமண வாழ்க்கை தொடர்பான கதைக்களம் எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக அமையவில்லை.

நாயகனாக இளன் தனது கதாபாத்திரத்திற்கு இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் இளைஞன், காதலில் உருகும் காதலன், மனைவி வீட்டில் வசிக்கும் மருமகன் என கதையின் வெவ்வேறு கட்டங்களில் வரும் மாற்றங்களை அதிகப்படியான செயற்கைத்தனம் இல்லாமல் வெளிப்படுத்துகிறார். குறிப்பாக மாமியார் வீட்டில் வசிக்கும் சூழலில் ஏற்படும் சங்கடங்களை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது.

சான்வி மேக்னாவுக்கு இது முக்கியமான கதாபாத்திரம். காதலியாகவும், தனது முடிவில் உறுதியாக நிற்கும் மனைவியாகவும், துடிப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். இளனுக்கு இணையான கதாபாத்திரமாகவே படம் முழுவதும் பயணிக்கும் அவர், பல காட்சிகளில் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார்.

சான்வியின் தாயாக வரும் ராதிகா, அனுபவம் வாய்ந்த நடிகையாக தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். குடும்பத்தின் உணர்வுகளையும், மகளின் முடிவையும் சமாளிக்கும் கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல் உள்ளிட்டோர் கதையின் நகர்வுக்கு தேவையான கதாபாத்திரங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். யோகி பாபு இடம்பெறும் சில காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. அதே நேரத்தில் மாறனின் நகைச்சுவை காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை.

தினேஷ் கே. பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு வண்ணமயமான தோற்றத்தை கொடுத்திருக்கிறது. கதையின் பெரும்பகுதி குறிப்பிட்ட சில இடங்களிலேயே நகர்ந்தாலும், காட்சிகளை சுவாரஸ்யமாக பதிவு செய்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மனதில் நீண்ட நேரம் நிற்கும் வகையில் அமையவில்லை. ஆனால், பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான அளவில் பயணிக்கிறது.

படத்தின் முதல் பாதி காதல், சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் வைரலாகும் விதம், அதைச் சுற்றி உருவாகும் கருத்துகள் என கலகலப்பாக நகர்கிறது. இதனால் அந்தப் பகுதி ரசிகர்களை ஓரளவு ரசிக்க வைக்கிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் திருமண வாழ்க்கையை மையப்படுத்திய காட்சிகள் படத்தின் வேகத்தை குறைக்கின்றன. மனைவி வீட்டில் வசிக்கும் கணவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு இணையாக காட்ட முயற்சித்திருப்பது சுவாரஸ்யமான முயற்சியாக இருந்தாலும், அதை திரைக்கதையில் அழுத்தமாகவும் இயல்பாகவும் கொண்டு செல்ல முடியவில்லை.

குறிப்பாக, திருமணத்திற்குப் பிறகு ஆண்–பெண் இருவரின் குடும்ப வாழ்க்கை, பொறுப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்த விவாதத்தை இன்னும் ஆழமாக கையாண்டிருக்கலாம். அந்த வாய்ப்பு இருந்தும், சில காட்சிகள் மேலோட்டமான நகைச்சுவையை மட்டுமே நம்பியிருப்பது படத்தின் பலவீனமாக மாறுகிறது.

காதல் கதையை சுவாரஸ்யமாக கையாண்ட இளன், திருமண வாழ்க்கையின் சிக்கல்களை கையாளும்போது சற்று தடுமாறியிருக்கிறார். கதையின் மையக்கருத்து புதுமையாக இருந்தாலும், அதற்கேற்ற வலுவான திரைக்கதை இரண்டாம் பாதியில் இல்லாதது படத்தின் தாக்கத்தை குறைக்கிறது.

மொத்தத்தில், ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் இளன் நடிகராக கவனம் ஈர்க்கிறார்; ஆனால் இயக்குநராக தனது முந்தைய படத்தின் வெற்றியை மீண்டும் தொடர முடியாமல் தடுமாறுகிறார். காதல் காட்சிகளால் ரசிக்க வைக்கும் முதல் பாதி, திருமண வாழ்க்கையை கையாளும் விதத்தால் இரண்டாம் பாதியில் சோர்வடையச் செய்கிறது.

ஹீரோவாக இளன் ஓகே… இயக்குநராக இன்னும் கொஞ்சம் கவனம் தேவை!