எதையும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட படைப்பாளி சங்ககிரி ராஜ்குமார். அந்த எண்ணத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக உருவாகியிருக்கிறது ‘தி ஒன்’ திரைப்படம்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், கேமராவுக்கு முன்னால் தோன்றும் பல்வேறு கதாபாத்திரங்களாகவும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, கேமராவுக்குப் பின்னால் இருக்கும் பல்வேறு தொழில்நுட்பப் பொறுப்புகளையும் அவரே ஏற்றுக்கொண்டுள்ளார். ஒரு திரைப்படத்தை இவ்வளவு பொறுப்புகளைத் தனி ஒருவராக ஏற்று உருவாக்கியிருப்பதற்காகவே முதலில் அவரைப் பாராட்ட வேண்டும்.
பல திறமைகளைக் கொண்ட நான்கு இளைஞர்கள், தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் விருதுகளைப் பெறுவதற்காக பயணம் செய்கிறார்கள். அந்த நேரத்தில் உலகமே முடக்கப்படவிருக்கும் சூழல் உருவாகிறது.
அவர்கள் செல்லும் வழியில் எதிர்பாராத சில தடைகள் ஏற்பட, இறுதியில் ஒரு முக்கியமான ஆய்வகத்திற்குள் சென்று விடுகிறார்கள். அங்கு அவர்கள் செய்யும் ஒரு செயல் மிகப்பெரிய விபரீதத்தை ஏற்படுத்துகிறது. அதன் விளைவாக உலகில் இருந்த மனிதர்கள் அனைவரும் காணாமல் போகிறார்கள்.
அதன்பிறகு என்ன நடக்கிறது? இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்ன? என்பதுதான் ‘தி ஒன்’ திரைப்படத்தின் மையக்கதை.
படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றும் சங்ககிரி ராஜ்குமார், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.
வெறும் வித்தியாசமான தோற்றங்களின் மூலம் மட்டுமல்லாமல், உடல்மொழி, நடத்தை, குரல் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வேறுபடுத்திக் காட்டியிருப்பது கவனிக்க வைக்கிறது.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல், படத்தின் பல்வேறு தொழில்நுட்பப் பணிகளையும் சங்ககிரி ராஜ்குமார் மேற்கொண்டுள்ளார்.
கேமரா, சவுண்ட் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகளிலும் அவருடைய உழைப்பு வெளிப்படுகிறது. குறிப்பாக, ஒரு தனி மனிதரின் முயற்சியில் இத்தனை விஷயங்கள் சாத்தியமாகியிருக்கிறதே என்ற ஆச்சரியம் படம் பார்க்கும் ரசிகர்களுக்குள் தொடர்ந்து ஏற்படுகிறது.
எப்படி இருக்கிறது ‘தி ஒன்’?
கதையின் அடிப்படையில் நல்ல Fantasy அம்சங்களைக் கொண்டிருக்கிறது திரைப்படம். உலகமே காணாமல் போகும் என்ற மையக்கரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
அதேநேரத்தில், திரைக்கதையில் இன்னும் அதிக பரபரப்பையும் விறுவிறுப்பையும் கொண்டு வந்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. சில இடங்களில் காட்சிகளின் வேகம் குறைவது படத்தின் தாக்கத்தை சற்றே பாதிக்கிறது.
ஆனால், “ஒரு மனிதரால் இவ்வளவு விஷயங்களை தனியாக செய்ய முடியுமா?” என்ற ஆச்சரியம் படம் முழுவதும் நம்மைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம்.
மனதைத் தொடும் இறுதிப்பகுதி, படத்தின் இறுதியில், இந்தப் படத்தை ஒரு தனி மனிதராக நின்று உருவாக்கிய விதத்தை விளக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன.
அந்தப் பகுதி, இந்த திரைப்படத்திற்காக சங்ககிரி ராஜ்குமார் எவ்வளவு அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. சினிமாவை வெறும் தொழிலாக பார்க்காமல், தனது கனவாகவும் உயிராகவும் நினைத்து பயணிக்கும் ஒரு கலைஞனின் உழைப்பை அந்தக் காட்சிகள் உணர வைக்கின்றன.
‘தி ஒன்’ – ஒரு வழக்கமான திரைப்பட அனுபவத்தைத் தாண்டி, ஒரு தனி மனிதனின் சினிமா மீதான காதலையும் விடாமுயற்சியையும் பதிவு செய்யும் முயற்சி.
படத்தின் குறைகள் இருந்தாலும், இப்படியொரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்ட சங்ககிரி ராஜ்குமாரின் துணிச்சலுக்கும் அர்ப்பணிப்புக்கும் நிச்சயம் ஒரு பெரிய பாராட்டு சொல்லலாம்.
ரேட்டிங் 3.5/5


