ஃபஹத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ டீசர் வெளியீடு – கற்பனை உலகிற்கு அழைக்கும் புதிய பொழுதுபோக்கு

பன்முக திறமை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ள இப்படத்தை, Showing Business நிறுவனத்தின் சார்பில் எஸ்.எஸ். கார்த்திகேயா, Arka Media Works நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். ‘பாகுபலி’ படத்தை தயாரித்த குழுவினரின் பங்களிப்பு இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டீசரில், ஒரு சிறுமிக்கு மேஜிக் செய்து காட்டும் ஃபஹத் பாசில், பின்னர் அவளை மறையச் செய்யும் வித்தையால் எதிர்பாராத சிக்கலில் சிக்கிக் கொள்வது கதையின் முக்கிய திருப்பமாக அமைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்ற ஆர்வத்தை டீசர் முழுவதும் தக்க வைத்திருக்கிறது.

ஃபஹத் பாசிலின் கலகலப்பான நடிப்பு, சிறுமியின் இயல்பான திரைநடிப்பு, காள பைரவாவின் விறுவிறுப்பான பின்னணி இசை மற்றும் தரமான ஒளிப்பதிவு ஆகியவை டீசரின் பலமாக அமைந்துள்ளன.

கற்பனை, நகைச்சுவை, சாகசம் மற்றும் உணர்வுகளை இணைக்கும் இந்த திரைப்படம், 2026 செப்டம்பர் 11 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.