நிஜத்திலும் ஹீரோ பாலகிருஷ்ணா

2000ஆண்டுகளுக்கு முன் பாரத தேசத்தை ஒருங்கிணைத்து ஆட்சி செய்து அதுவும் தன் தாயார் கெளதமியின் பெயரையே முதல் பெயராகக் கொண்டு ஆண்ட கெளதமி புத்ர சாதகர்ணி என்கிற பேரரசனைப் பற்றிய கதையே இந்த படம்.

கெளதமி புத்ர சாதகர்ணி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாடல்களை கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட நடிகர் கார்த்தி பெற்றுக்கொண்டார். இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் நேரடியாக எடுக்கப்பட்டவை என்றார் சி.கல்யான். அதேபோல், கர்ணன் படத்தில் என்.டி.ஆர் வாங்கிய பெயரை விட கெளதமி புத்ர சாதகர்ணி படம் பாலகிருஷ்ணாவுக்கு  அதிகம் பெயரை வாங்கிக் கொடுக்கும் என்றும் கூறினார்.  

விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், தசாவதாரம் இயக்குவதற்கு எனக்கு ஒன்றரை வருடம் ஆயிற்று. ஆனால், இவ்வளவு பிரமாண்டமான படத்தை 79 நாட்களில் இயக்கியிருக்கிறார் கிரிஷ்.  படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரின் பெயருக்கு முன்னாலும் அவர்களின் தாயாரின் பெயரைப் போட்டு அறிமுகப்படுத்தியதும் சிறப்பான ஒன்று என்றார். பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கப் போகும் இவரின்  அடுத்த படத்திற்கு சிரந்தன் பட் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார்

நான் பிறந்தது தமிழ்நாடு தான், இது என் தாய் ஊரு, அப்புறம் தெலுங்கு பிரிந்தது, ஆனால், நாம் எல்லோரும் இன்றும் ஒரேநாட்டினர்தான், உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் எப்பொழுதும் வேண்டும் என்று  தமிழில் பேசினார் பாலகிருஷ்ணா. முன்னதாக பாலகிருஷ்ணா செய்து வரும் சமூக பணிகள் பற்றிய வீடியோ வெளியிடப்பட்டது, அதில் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பிரமாண்ட மருத்துவ மனையை ஏழைகளுக்காக கட்டிக்கொடுத்துள்ளார். அவர் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல நிஜத்திலும் ஹீரோ.