ஆதி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளது. இதுபற்றி கூறிய ஆதி..
‘மரகதநாணயம்’ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த கதையில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருந்தது. மரகதநாணயம் படத்தில் கதை தான் ஹீரோ. முனிஸ்காந்த், டேனியல் ஆகியோர் முதுகெலும்பாக இருந்து படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். அருண்ராஜா காமராஜ், நிக்கி கல்ராணி ஆகியோரின் கதாபாத்திரம் சிறப்பாக இருந்தது. இயக்குனர் சொன்னது போலவே அனைவரும் கைதட்டி, சிரித்து ரசிக்கிறார்கள்.
அடுத்ததாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இதை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்குகிறார். இது ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம். இதைதொடர்ந்து தெலுங்கில் நடிகர் ராம் சரணுடன் ‘ரங்கஸ்தளம் 1985’ என்ற படத்தில் நடிக்கிறேன். அடுத்ததாக நானியுடன் ‘நின்னு கோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். வில்லன் பாத்திரத்திலோ அல்லது இரண்டு நாயகர்களுடனோ நடிப்பதில் எனக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. என்னுடைய கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என்பது தான் எனக்கு முக்கியம்.
தெலுங்கை விட தமிழ் படங்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறேன். இதை நான் தெலுங்கு பத்திரிகையாளர்களிடம் கூட கூறியுள்ளேன். ஏனென்றால் நான் தமிழ் நாட்டில் தான் படித்து வளர்ந்தேன். எனக்கு தமிழ் எளிதாகவும், மனதுக்கு நெருக்கமாகவும் உள்ளது. எல்லோரும் கல்யாணம் எப்போது என்று கேட்கிறார்கள். கல்யாணம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது, வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கண்டிப்பாக பெற்றோர் பார்க்கும் பெண்ணைத் தான் மணப்பேன்” என்றார்.