அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு, நேற்று 11 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், இன்று காலை மேலும் 7 பேர் ஆதரவு கொடுத்தனர். தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுவரை 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தனியாக பிரிந்த போது, பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 117 என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 122 எம்எல்ஏக்களின் ஆதரவு எடப்பாடி ஆரசுக்கு கிடைத்ததால் ஆட்சியை தக்க வைத்தார்.
ஆனால் அந்த 122 எம்எல்ஏக்களில் 25 பேர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஓபிஎஸ் அணியினர் ஆதரவு கொடுத்தாலும் எடப்பாடியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஆட்சி கவிழும் என்று பரவலாக பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தினகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியாததால், தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.