இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் ‘புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார்
அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து ‘புஷ்பா : தி ரைஸ்’ பாகம் – 1 தயாரித்துள்ளனர். லைகா புரடக்சன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது.
டிசம்பர் 17- ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்பதிப்பின் முன்வெளியீட்டுக்காக தமிழ் சினிமா பிரபலங்களுடன், நடிகர் அல்லு அர்ஜீன், உட்பட படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில்
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் திருப்பதி பிரசாத் பேசியதாவது…
அல்லு அர்ஜூன், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், இயக்குநர் சுகுமார் அனைவருக்கும் வாழ்த்துகள். அல்லு அர்ஜூன் இங்கு சென்னையில் தி நகரில் தான் வளர்ந்தார். சின்னக்குழந்தையிலேயே ஒழுக்கத்தில் சிறந்தவராக இருந்தார். இந்தப்படம் காட்டுக்குள் அதிகம் படமாக்கப்பட்டிருக்கிறது. கண்டிப்பா வெற்றிப்படமாக இப்படம் இருக்கும். தமிழ் ரசிகர்களுக்கு இந்தப்படம் பிடிக்கும். எல்லோருக்கும் வாழ்த்துகள்.
லைகா புரடக்சன்ஸ் சார்பாக தமிழ்க்குமரன் பேசியதாவது…
பிரமாண்ட படங்களை வழங்குவதில் லைகா புரடக்சன்ஸ் பெருமை கொள்கிறது. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமான புஷ்பா படத்தை நாங்கள் வெளியிடுவது பெருமை. இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. படக்குழுவினருக்கு லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் சார்பாக வாழ்த்துகள்.
பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது….
புஷ்பா படத்தில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் ஆரம்பிக்கும்போது நான் நிறைய படங்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அதனால் மறுத்தேன், ஆனால் மறுநாள் அல்லு அர்ஜூனே ஆள் அனுப்பி நான் தான் வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் அன்பால் தான் வேலை செய்ய ஆரம்பித்தேன். காட்டுக்குள் அவர்கள் இப்படத்தை எடுத்ததை பார்க்க பிரமிப்பாக இருந்தது. ஆக்சன் காட்சிகள் எல்லாம் அத்தனை அற்புதமாக வந்திருக்கிறது. அல்லு ஆர்ஜுன் முழுப்படத்திலும் அவருக்கென பிரத்யேகமான உடல்மொழியை பின்பற்றியிருக்கிறார் அது பார்க்க நன்றாக இருக்கிறது. ஒரு நேரடி தமிழ் படம் பார்க்கும் உணர்வை இப்படம் கொண்டுவரும்படி உழைத்திருக்கிறோம். தமிழில் நாயகனுக்கு ‘ரா’ வராமல் இருந்தால் எப்படி இருக்கும் என புதிதாக முயற்சித்தோம். சேகர் அதை அட்டகாசமாக பேசியுள்ளார். சுகுமார் மிக அழகாக இப்படத்தை இயக்கியுள்ளார். எல்லோருக்கும் வாழ்த்துகள். கண்டிப்பாக இப்படம் பெரிய வெற்றியை பெறும். ராஷ்மிகா சின்ன சின்ன முகபாவனைகளிலும் அசத்தியிருக்கிறார். பகத் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும். படம் வெற்றி பெற வாழ்த்துகள் நன்றி.
இயக்குநர் சிறுத்தை சிவா பேசியதாவது…
சினிமா பற்றி அனைத்து துறையும் தெரிந்து வைத்திருக்கிறார் அல்லு அர்ஜூன், அவரை சந்தித்தது மிக சிறந்த அனுபவமாக இருந்தது. அவரோடு பேச பேச சினிமா பற்றி அவர் சொன்னது பிரமிப்பாக இருந்தது. பாடல்கள் எல்லாம் மிக அற்புதமாக வந்திருக்கிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் அசத்தியிருக்கிறார். பாடல் கேட்க அவ்வளவு நன்றாக இருந்தது. டிரெய்லர் எல்லாம் சூப்பராக இருந்தது. படக் காட்சிகள் பார்க்கும் போதே வெற்றி உறுதியாக தெரிகிறது. அல்லு அர்ஜூனுக்கு தமிழில் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் வாழ்த்துகள்.
தயாரிப்பாளர் RB சௌத்திரி பேசியதாவது…
அல்லு அர்ஜூனை முதலில் பார்த்த போது என்னடா உயரம் இல்லையே எப்படி இந்தப் பையன் ஜெயிப்பான் என நினைத்தேன். ஆனால் இப்போது அவரது வளர்ச்சியை பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. தெலுங்கை தாண்டி, வடக்கிலும், மலையாளத்திலும் மிகப்பெரும் பிஸினஸ் வைத்திருக்கிறார். படம் டிரெய்லர் பார்க்கவே பிரமாண்டமாக இருக்கிறது. கண்டிப்பாக இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். வாழ்த்துகள்
தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது…
டீசர் பார்க்கிறேன், பாடல் பார்க்கிறேன் இப்படிப்பட்ட படத்தை நான் தயாரிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தான் தோன்றியது. அப்படி பிரமாண்டமாக எடுத்திருக்கிறார்கள். அல்லு அர்ஜூன் தெலுங்கு ஹீரோ என்றாலும் தமிழ் பையன், தமிழால் வளர்ந்த பையன். பாடலில் தேவிஶ்ரீபிரசாத் இசை, குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும். அல்லு அர்ஜூனுக்கு மிகப்பெரிய எதிர்காலம் தமிழில் இருக்கிறது. தமிழுக்கு வாருங்கள் என் வரவேற்று வாழ்த்துகிறேன் நன்றி
இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் பேசியதாவது…
எல்லோரையும் விட எனக்கு சந்தோஷம் என்னவென்றால் அல்லு அர்ஜூன் தமிழில் வருவது தான். நாங்க சென்னையில் வளர்ந்த பசங்க, எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கு, அல்லுக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்று தெரியும். அவர் தமிழில் இந்தப்படம் செய்வது எனக்கு தான் அதிக சந்தோஷம். இந்தப்படம் தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்வதாக நினைப்பீர்கள், ஆனால் கதை கேட்ட அன்றே, நான் இது தமிழ் படம் நீங்கள் தெலுங்கில் எடுக்கிறீர்கள் என்று சொன்னேன். படத்தின் கதையின் உயிர் எல்லாம் தமிழில் பொருந்தி போகும். அல்லு அர்ஜூன் மிகச்சிறந்த உழைப்பாளி. இயக்குநர் சுகுமாருக்கு வாழ்த்துகள். வேலை பார்த்த நாங்களே ஆச்சர்யப்படும்படி படத்தை செய்துள்ளார்கள். படத்தில் ஒரு ஃபைட் செய்துள்ளார்கள் அதை எப்படி சொல்வது என தெரியவில்லை, அதை ஃபைட் என்றே சொல்ல முடியாது சினிமாவில் மிகச்சிறந்த ஆக்சன் காட்சியாக அது இருக்கும். இந்தப்படம் அல்லு அர்ஜூனை இந்திய நட்சத்திரமாக மாற்றும், இந்தப்படத்தில் அல்லு அர்ஜூன் தேசிய விருதை வெல்வார். சுகுமாரும் வெல்வார் இருவருக்கும் வாழ்த்துகள். பாடர்கள், பாடலாசிரியர்கள் அனைனவருக்கும் நன்றி. ஆண்ட்ரியாவுக்கு ஸ்பெஷல் நன்றி. புஷ்பா உங்கள் எல்லோரையும் கவரும் நன்றி.
நடிகர் அல்லு அர்ஜுன் பேசியதாவது…
மன்னிக்கனும் நான் தமிழ் பேசும்போது தமிழ்ல தப்பு இருக்கும் நிறைய வருஷம் ஆச்சு. தமிழ்ல பேசி, ஆனாலும் தமிழில் தான் பேச
போறேன். முதலில் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கு வந்து வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்
நன்றி. மதன் கார்கிக்கு முதலில் மிகப்பெரிய நன்றி. தேவி இந்தப்படத்தை கேட்டு இந்தப்படம் தமிழ் மாதிரியே இருக்கே என்றார் நானே தமிழ் தானே என்றேன். சௌத்திரி சார் வட இந்தியாவில் என்னை பற்றி பேசினார்கள் என்றார், ஆனால் நம்ம ஊரில் நம்மை பேசவில்லையே என ஏக்கம் இருந்தது. அதை இப்படம் போக்கும். இது தமிழில் அப்படியே பொருந்தும். இப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தந்ததில் மிக முக்கிய பங்காற்றிய மதன் கார்க்கி சாருக்கு நன்றி. சுகுமார் சாருக்கு நன்றி.
நான் ஹீரோவா மாறினது ஆர்யா படத்தில் தான். அப்போதிருந்தே அவரிடம் கேட்டேன், நாம் எப்போது படம் செய்யலாம் என்று, ஆனால் நாம் சேர்ந்தால் நல்ல படமாக இருக்கனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். இந்தப்படம் அந்தளவு ஈஸி இல்லை. புஷ்பா படம் செய்வது, நாலு படத்தை செய்வது போன்றது. ஆனால் சுகுமார் மிக கடுமையாக உழைத்திருக்கிறார். மொத்த குழுவுமே காட்டுக்குள் மிகக்கடினமாக உழைத்திருக்கிறார்கள். தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. இங்கு பாட்டு ஹிட் ஆனவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். தமிழில் ஜெயித்தால் தான் வாழ்வு முழுமையாகும், இங்கிருந்து என்னை பாராட்டினால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். புஷ்பா அதை செய்யும். ஐகான் ஸ்டார் சுகுமார் சார் தான் தந்தார். ஸ்டைலீஷ் ஸ்டார் அவர் தான் தந்தார் நான் வேலை செய்யும் போது யோசிக்கமாட்டேன் அது ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன் அவ்வளவு தான். தமிழில் படம் செய்ய வேண்டும், தமிழ் இயக்குநர்களிடம் கேளுங்கள் நான் நடிக்க ரெடி. இந்தப்படம் சந்தன மரக்கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவு தான். இதில் அரசியல் எல்லாம் இல்லை. படம் நல்லா வரணும் என்று நினைத்து தான் நான் டப்பிங் பேசவில்லை. இந்தப்பட கேரக்டருக்கு மாறியது சவாலாக இருந்தது. லுக் செட் பண்ணவே எங்களுக்கு 4 மாதம் ஆனது. படம் வெளியான பிறகு இன்னும் நிறைய பேசலாம். இந்தப்படத்தில் அத்தனை விசயம் இருக்கிறது. ஷீட்டிங் ஸ்பாட் போகவே 2 மணி நேரம் ஆகும், அங்கு லைட் இருக்காது காட்டுக்குள் நிறைய கஷ்டங்கள் இருக்கும். எல்லாவற்றையும் கடந்து தான் படமாக்கியுள்ளோம். ராஷ்மிகா வித்தியாசமா பண்ணிருக்காங்க, பெரிய பெரிய நட்சத்திரங்கள் வித்தியாசமான லுக்கில் அட்டகாசமா பண்ணிருக்காங்க. முக்கியமா பகத் பாசில் அவர் நடிப்பதை பார்த்து ரசித்தேன். தமிழில் படம் ஓடினா என் வாழ்க்கை கம்ப்ளீட் ஆகும், நீங்கள் அனைவரும் கொண்டாடும் படமாக இது இருக்கும் நன்றி.
அல்லு அர்ஜுனின் நடிப்பில் முதல் அகில இந்திய திரைப்படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.