மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் – ஸ்டாலின்

சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் பேசியதாவது,  கொளத்தூர் தொகுதியை சேர்ந்த சந்திரா என்ற பெண் கடந்த 13ஆம்தேதி மின் விபத்தில் உயிரிழந்தார். மின் கம்பிகள் அரசின் முறையான பராமரிப்பு இல்லாததால் இது போன்ற விபத்து நடந்துள்ளது. அவர்கள் குடும்பத்தினர் உதவித் தொகையையும் இன்னும் பெறவில்லை.

எனவே மின்வாரியத்தின் நிவாரண உதவி ரூ.2 லட்சத்தையும் சேர்த்து அரசின் சார்பில் ரூ.10 லட்சம் இழப்பீடு தரவேண்டும். கொளத்தூர் தொகுதியில் 37 கி.மீ. தூரத்துக்கு தாழ்வழுத்த மின்கம்பி வடம் செல்கிறது. அதை புதை வடமாக மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு மின்துறை அமைச்சர் தங்கமணி பதில் அளித்ததாவது, கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் 80 சதவீத மின் வினியோகம் மேலே செல்லும் தாழ்வழுத்த மின் கம்பிகள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பூம்புகார் நகர் முதல் குறுக்கு தெருவில் எதிர்பாராத வகையில் மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின் விபத்து ஏற்பட்டுள்ளது.

கொளத்தூர் மற்றும் விரிவு படுத்தப்பட்ட சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மேல் நிலை மின் கம்பிகளை அகற்றி உதவி வடமாக மாற்றி அமைக்க ரூ.2,567 கோடி செலவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.