பாராளுமன்றத்தில் எம்.பி.க்களின் தேவையற்ற பேச்சால், இது என்ன பள்ளிக்கூடமா? என சபாநாயகர் கோபம்

பாராளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின்னர் அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி வெளியே எழுந்து சென்றார். அப்போது, அங்கிருந்த எம்.பி.க்கள் அவையின் அலுவல்சாராத விவகாரங்களை முன்வைத்து ஒருவருக்கொருவர் கசமுசவென்று பேசி கொண்டிருந்தனர். அப்போது, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எழுந்து நின்று அமைதியாக இருக்குமாறு உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார். அதை பொருட்படுத்தாத உறுப்பினர்கள் வெகு சுவாரஸ்யமாக தங்களது பேச்சில் மூழ்கி கிடந்தனர்.

இதனால், அவையை தொடர்ந்து நடத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எரிச்சல் அடைந்தார். உடனே ஒலிபெருக்கியை பிடித்து, இங்கு என்ன நடக்கிறது, இது என்ன பள்ளிக் கூடமா? என்று கோபமாக கேட்டார். சபாநாயகரின் வழக்கத்துக்கு மாறான கோபத்தை கண்டு ஆச்சரியப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அதன் பின்னர் அமைதியாக அமர்ந்தனர். இதன் பின்னர், அவையின் இதர நடவடிக்கைகள் வழக்கம்போல் நடைபெற்றன.