சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் நீர்இருப்பு அடியோடு குறைந்து உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை நிறைவேற்ற முடியும். இதனால் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் மாற்று வழியை தேடி வருகிறார்கள். போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து சென்னை நகர மக்கள் தப்பிக்க முடியும்.
இப்போதே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கி உள்ளது.
அதனை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள். தண்ணீருக்காக குடத்துடன் பெண்களும், ஆண்களும் சாலைகளில் செல்வதை காண முடிகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க விவசாய கிணறு மற்றும் கல்குவாரி குட்டைகளில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது எந்த அளவு சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இந்த தண்ணீர் கிடைத்தால் மட்டுமே சென்னையில் குடிநீர் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க முடியும். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் கடந்த ஜனவரி 9 ஆம் தேதியில் இருந்து திறந்து விடப்பட்டது.
தற்போது கண்டலேறு அணையில் நீர்மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நீரும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. பூண்டி ஏரி நீரை வைத்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி வெறும் 3 கனஅடி மட்டுமே கிருஷ்ணா தண்ணீர் வருகிறது. பூண்டி ஏரியில் தண்ணீர் குறைந்து அளவே உள்ளதால் அங்குள்ள காலி இடத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
இன்று காலை நிலவரப்படி 6 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இனி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. பூண்டி ஏரியில் 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 391 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு லிங் கால்வாயில் 282 கனஅடியும், சென்னை மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாயில் 10 கனஅடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 21 அடியாக உள்ளது. இது 17 அடியாக குறைந்தால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. தற்போதைய நிலவரப்படி 494 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 282 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 74 கனஅடி வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் நீர்மட்டம் குறைந்து வறண்டு வருகிறது. ஏரியில் வெறும் 6 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கனஅடி ஆகும். தண்ணீர் இருப்பு அடியோடு குறைந்ததால் ஏரியில் சிறிய குட்டைபோல் நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் மோட்டார் மூலம் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்ட தண்ணீரும் கடந்த 2 நாளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டு விட்டது. புழல் ஏரியில் மட்டுமே மற்ற ஏரிகளை விட அதிகபட்சமாக 585 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. ஏரியில் இருந்து 75 கனஅடி குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்படுகிறது.