மணிப்பூரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் காங்கிரஸ் 28 இடங்களையும், பா.ஜனதா 21 இடங்களையும் கைப்பற்றின. நாகலாந்து மக்கள் முன்னணி 4 இடங்களிலும், தேசிய மக்கள் கட்சி 4 தொகுதியிலும், லோக்ஜன சக்தி, திரிணாமுல் காங்கிரஸ், சுயேட்சை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 31 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சை ஆதரவுடன் மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சியை அமைத்தது.
33 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததால் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. பிரேன்சிங் மணிப்பூர் பா.ஜனதா முதல் மந்திரியாக கடந்த 15ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஜாய்குமார் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். பிரேன்சிங் மணிப்பூர் சட்டசபையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் நஜ்மல் ஹெப்துல்லா உத்தரவிட்டு இருந்தார். அதன்படி நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக சட்டசபை கூட்டம் இன்று நடந்தது.
கேம்சந்த் மணிப்பூர் சட்டமன்ற சபாநாயகராக தேர்வு பெற்றார். அதைத்தொடர்ந்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரேன்சிங் வெற்றி பெற்றார். பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக 32 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர். 27 எம்.எல். ஏ.க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக வாக்களித்தனர். இதன்மூலம் தற்போது நடந்த 5 மாநிலங்களில் பா.ஜனதா 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.