குடிநீர் வடிகால் வாரியத்தில் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாக ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சென்னையில் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.குமார் தலைமையில் வியானன்று (மார்ச் 16) பெருந்திரள் முறையீடு நடைபெற்றது.
மூன்று கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்டுள்ள பராமரிப்பு பணியாளர்களுக்கு ஷெட்யூல் ஆப் ரேட்படி ஊதியம் வழங்க வேண்டும், அவர்களுக்கு அடையாள அட்டை, போனஸ், இஎஸ்ஐ, ஈட்டுறுதி மற்றும் சமூக பாதுக்காப்புகளை வழங்க வேண்டும், அந்த ஊழியர்களுக்கு இந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஊதியத்தை வங்கி மூலம் வழங்க வேண்டும், வாரியத்தில் பணியாற்றும் கடை நிலை ஊழியர்களான பராமறிப்பு உதவியாளர்களுக்கு ஒரு நபர் குழு பரிந்துரையை உடனடியாக அமலாக்க வேண்டும், தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 480 நாட்கள் பணி முடித்த தேதியில் இருந்து காலமுறை ஊதியமும், 1.8.2006 முதல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், களப்பணியில் பணியாற்றி வரும் தொழிற்கல்வி (ஐடிஐ) தகுதி பெற்ற தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வாரிய ஆணை எண். 505ஐ உடனடியாக அமல்படுத்த வேண்டும், 60 விழுக்காடு காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில பொதுச் செயலாளர் எம்.பாலகுமார், பொருளாளர் வி.அழகுமலை, உதவி பொதுச் செயலாளர்கள் ஆர்.ரவி, எம்.ஆம்தநாதன், உதவித் தலைவர்கள் பி.கே.வேலு, சி.அய்யப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார். இதில் நிர்வாகிகள் சி.முருகன், ஆர்.சந்திரசேகரன், ஆர்.மருதைராசு, பி.குணசேகரன், கே.செல்வம், ஆர்.அரவிந்த் உள்ளிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.