புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் இன்று 21-வது நாளை எட்டியுள்ளது. போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர், திரையுலகினர் பங்கேற்று வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படாது என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதே போல் மக்கள் ஏற்காத இந்த திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்தாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதனால் நெடுவாசல் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டத்தை விலக்கி கொள்ள போராட்டக்குழு முன்வரவில்லை. நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லையில் தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது. நேற்று மாலை நெடுவாசலில் இருந்து நல்லாண்டார் கொல்லை வரை பேரணி நடைபெற்றது.
போராட்டக் குழுவினர் நிருபர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளது. அப்போது தமிழக எம்.பி.க்கள் ஹைட்ரோ கார்பன் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும். மேலும் திட்டத்தை கைவிடவும், ரத்து செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும் வலியுறுத்த வேண்டும் என்றனர். அதுவரை நெடுவாசலில் போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். விவசாயிகள் கூறும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைவிட்ட நிலையில் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இயற்கை வளத்தையும் விவசாயத்தையும் பாதிக்கிற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்திருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ளாத மக்கள், வெகுண்டு எழுந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். அதில் பெரும்பாலான திட்டங்கள் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதும் தொடர்கிறது.
அந்த வரிசையில் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டமும் இணைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு தடை விதிக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக வடகாட்டில் இன்று 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் கையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.