சினிமா நடன இயக்குநர் ஸ்ரீதர் நடன பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது நடன பள்ளியில் பல சினிமா பிரபலங்களின் குழந்தைகளும் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த பள்ளியின் மூலம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அதற்காக சினிமா பிரபலங்களை அழைத்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் அவர் பேசியதாவது:-
ஸ்மார்ட் ஃபோன் வந்த பிறகு பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் குழந்தைகளின் படிப்பு, விளையாட்டு, செயல்திறன் போன்றவற்றில் கவனம் குறைந்து அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் சூழ்நிலை உருவாகி வருகிறது. ஆகையால், குழந்தைகளின் கவனத்தை கைபேசியிலிருந்து திசை திருப்பும் நோக்கத்தோடு நடனத்தைப் பயிற்றுவிக்கிறோம். அதுமட்டுமில்லாமல், நடனம் உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். உடலின் சக்தி அதிகரிக்கும். மன அழுத்தமும் குறையும். இதை குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் ஆடலாம், அப்படி ஆடும் போது குடும்பங்களில் ஒற்றுமையும், நெருக்கமும் அதிகமாகும்.
வாரத்தில் 3 நாட்கள் நாங்கள் இந்த நடனத்தைக் பயிற்றுவிக்கிறோம். இந்த நல்ல விஷயத்திற்கு சினிமா பிரபலங்கள் தங்கள் ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள். அதேபோல், சின்னத்திரை நட்சத்திரங்கள் மைனா, லோகேஷ், ரேமா, அவினாஷ் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுடன் ஆடி மகிழ்ந்தார்கள். இவ்வாறு நடன இயக்குநர் ஸ்ரீதர் பேசினார்.
நிகழ்ச்சியில், நடிகை அம்பிகா, நடிகர் பரத், நடிகை சாய் தன்ஷிகா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடன இயக்குநர் சாண்டி, ரியோ ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.