மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று ‘ஸ்மார்ட்சிட்டி திட்டம்’ வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள புதிய நிறுவனம் ஏற்படுத்தப்பட்டு, அதற்கான சி.இ.ஓ பணியிடத்திற்கு நேர்காணலும் நடைப்பெற்றது. கடந்த 2ஆம் தேதி நடைப்பெற்ற இந்த நேர்காணலில் 21 பேர் விண்ணப்பித்து, 17 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் இந்த பதவிக்கு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., கே.பி.ராஜூவின் மகள் சுகன்யா நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அனுபவமே இல்லாத சுகன்யா இந்த பதவியில் இருக்க கூடாது, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி சிஇஓ பொறுப்பில் இருந்து சுகன்யா நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனிடம் நேற்று மதியம் நேரில் கொடுத்தார்.
அதில், ‘மன உளைச்சல் காரணமாக ஸ்மார்ட்சிட்டி சிஇஓ பொறுப்பில் என்னால் தொடர முடியாததால், பதவியை ராஜினமா செய்கிறேன்,” என குறிப்பிடப்பட்டு இருந்தது. நியமிக்கப்பட்ட 17 நாளில் சுகன்யா ராஜினமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,’ ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. புதிய அதிகாரி தேர்வு செய்யப்படும் வரை சிஇஓ பதவியையும் நானே கூடுதலாக கவனித்துக் கொள்வேன்,” என்றார்.