சசிகலா, ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துவிட்டார், என முன்னாள் அமைச்சர் முனுசாமி பேட்டி

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று காவேரிபட்டணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி சசிகலாவை சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதனை தொடர்ந்து அவர் முதல்-அமைச்சர் ஆவதற்காக பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை கொடுத்துள்ளார். இதை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடந்த 19-11-2011 அன்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவை சேர்த்தோம். அவர்கள் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்து இருந்தார். சசிகலா சகோதரியாக இருப்பதாக மட்டும் தெரிவித்து இருந்தார். அரசியலில் விருப்பம் இல்லை என தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கு மாறாக ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்துள்ளார். ஜெயலலிதாவுக்காக வாழ்வது உண்மை என்றால் சசிகலா முதல்-அமைச்சர் பதவியை ஏற்கக்கூடாது. நடராஜன் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். அப்பல்லோ மருத்துவமனை தற்போது ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை வெளியிடும் சமயத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் நடராஜனும் சேர்ந்திருக்கிறார். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.