படப்பிடிப்பு தொடங்கும் முன்பே அனைவரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்த ஒரு முக்கிய காரணம் உண்டு. விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் இயக்குனர் நவீன் போன்ற பிராண்டுகள் தான் அனைவரின் கவனத்தையும் இந்த படத்தின் மீது திருப்பியிருக்கிறது. அவர்கள் உண்மையில் சக்திவாய்ந்த திறமையாளர்கள், கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே பணிபுரிபவர்கள். குறிப்பாக, விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் போன்ற ஒரு அசாதாரணமான கூட்டணியை பார்க்கும்போது, ஒவ்வொருவருக்கும் இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகி உள்ளது.
“தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம். மேலும், விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர் தான் என அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர் தோற்றம் இருக்கும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல, அவர் கதாபாத்திரம் இந்த மாதிரியான மாற்றங்களை கோரியது. எனவே, பல்வேறு தோற்றங்களை பரிசீலித்து, இறுதியாக சரியான ஒன்றைக் கண்டுபிடித்தோம்” என்கிறார் இயக்குனர் நவீன்.
படம் மற்றும் கதாபாத்திரங்கள் பற்றி அவரை கேட்டபோது, சிறு மௌனமான புன்னகையுடன் அவர் கூறும்போது, “கதை அல்லது கதாபாத்திரங்களை பற்றி எதையும் இப்போது வெளிப்படுத்துவது சரியாக இருக்காது. ஆனால், அக்னி சிறகுகள் எங்கள் முந்தைய திரைப்படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்வேன்” என்றார்.
அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிக்கும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு மற்றும் சில முக்கியமான நடிகர்கள் நடிக்கிறார்கள்.