ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்தினர். இதனால், அதை தொடர்ந்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க அதன் சட்ட வடிவு சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பதால் அதற்கான சிறப்பு கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. நிரந்தர சட்ட முன் வடிவம் சபையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேறியது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்ட முன் வரைவானது குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கையெழுத்து பெறுவதற்காக புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய நிரந்தர சட்டம் அமலுக்கு வந்துள்ளதால், கடந்த 2011 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு பிறப்பித்த தற்காலிக அறிவிப்பாணைகளை திரும்ப பெற்றுக்கொள்வதாக உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாளை மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.