“அனுமனும் மயில்ராவணனும்”
முதல்முறையாக இந்தியாவில் தயாராகும் இதிகாசக் கதையம்சம் உள்ள் 3D அனிமேஷன் முழுநீளத் திரைப்படம் “அனுமனும் மயில்ராவணனும்”. திருவிளையாடல், கர்ணன் போன்ற கடவுள், அசுரர் என அசத்தலான பாத்திரங்கள் திரையில் தோன்றி பல வருடங்களுக்குப்பின் மெய் சிலிர்ப்பூட்டும் பிரம்மாண்டங்கள் நிறைந்த படமாக உருப்பெற்றிருக்கிறது “அனுமனும் மயில்ராவணனும்”.
உலகெங்கிலுமிருந்து 7 அனிமேஷன் கம்பெனிகள் பங்கு பெற்று பெரும் பொருள் செலவில் உருவாகி இருக்கும் எல்லா வயதினரும் பெரிதும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது இந்த திரைப்படம். வெளி நாட்டவரது உதவி இருப்பினும், இப்படம் சென்னையில் தான் பெரும்பான்மையாக உருவானது என்பது குறிப்படத்தக்கது.
இப்படத்தின் இயக்குனர் டாக்டர் எழில்வேந்தன் ஒரு பல் மருத்துவர், அனிமேஷன் துறையில் உள்ள ஆர்வத்தால் அதை பயின்று பின் இங்கிலாந்து சென்று வார்னர் பிரதர்ஸ் உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் பணியாற்றி, அந்த அனுபவங்களைக் கொண்டு இப்படத்தின் காட்சிகளை அமைத்துள்ளனர்.
சுற்றுப்புற சூழல் காட்சி வடிவமைப்பிலும் இதிகாசங்களில் காணப்படும் பிரமாண்ட கோட்டைகள், பாதாள உலகம் போன்ற மாயாஜால அரங்குகளை ஆங்கிலப்பட பாணியில் வடிவமைத்து இருக்கின்றனர். ஸ்டார் வார்ஸ், லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் போன்ற படங்கள் மனதில் எழுப்பும் பாதிப்பை நம் இதிகாசக் கதைகள் கொண்டு கண்டிப்பாக செய்திட முடியும் என்று தின்னமாய் சொல்கிறார் இயக்குனர் டாக்டர் எழில்வேந்தன். சுற்றுச்சூழல் கணினி ஓவியம் என்ற துறையில் தலைமைப் பொறுப்பில் 10 வருடங்களுக்கு மேல் இங்கிலாந்தில் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் இயக்குனர் இயக்குனர் டாக்டர் எழில்வேந்தன் இப்படத்தினை சென்னியிலிருந்து கொண்டும் வெளிநாட்டு/உள்நாட்டு கணினி ஓவியர்கள் கூடிய குழுக்களை அமைத்து வியப்பூட்டும் மாயாஜால அரங்குகளை சாமர்த்தியமாக அமைத்துள்ளார்.
அனுமன் தான் இப்படத்தின் கதாநாயகர். பாம்பு மனிதர், ஆளை விழுங்கும் ராட்சச புழுக்கள் என விசித்திரமான எதிரிகள் பலர் அனுமனுக்கு உண்டு. அவர்களை பந்தாடும் காட்சிகளிலும் வீரசாகச காட்சிகளிலும் சண்டைப் பயிற்சிக்கு முக்கியதவம் உள்ளதால் ஜப்பானில் உள்ள அனிமேஷன் கலைஞர்களை வைத்து அக்காட்சிகளை படமாக்கியுள்ளனர். முதன்முறையாக பத்துத்தலை இராவணன் புதுமையான ஒரு வடிவத்தில் சித்தரிக்கப்படுகிறார். அவரது பத்துத் தலைகளும் தனித்தனியே செயல்படுகிறது. கலிபோர்னியா அனிமேஷன் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர் ஒருவர் இந்த காட்சிகளை அனிமேட் செய்திருக்கிறார். தன் வேலையை சிறப்பாக முடித்தபின் “இராவணன் தான் நான் பார்த்த வில்லன் பாத்திரங்களிலேயே சிறந்த வில்லன்!” என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் அனைத்து மூல ஒவியங்களும் பெரும்பான்மையான கதைப்பலகைகளையும் எழில் வேந்தன் தன் IPAD கொண்டு வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முப்பரிமானத்தில் ஜூலை 6 அன்று வெளிவருகிறது “அனுமனும் மயில்ராவணனும்” 3D அனிமேஷன் திரைப்படம்.