உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: பிரேசில்–உருகுவே போட்டி சமன்

full-lnd2018–ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் தெற்கு அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் பிரேசில்–உருகுவே அணிகள் மோதிய ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள ரெசிப்பில் நடந்தது. 2014–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி வீரர் ஜியார்ஜியோ செலினியை கடித்ததால் 9 சர்வதேச போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட உருகுவே வீரர் லூயிஸ் சுவாரஸ் 20 மாதத்துக்கு பிறகு தமது அணிக்காக முதல்முறையாக இந்த ஆட்டத்தில் ஆடினார். பிரேசில் அணியில், பார்சிலோனா கிளப் அணியில் சுவாரஸ்சுடன் இணைந்து விளையாடும் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் இடம் பெற்று இருந்தார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே பிரேசில் அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் டக்ளஸ் கோஸ்ட் இந்த கோலை அடித்தார். 25–வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரெனாடோ அகுஸ்டா கோல் அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணி 2–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 30–வது நிமிடத்தில் உருகுவே அணி வீரர் எடின்சன் கவானி பதில் கோல் திருப்பினார். 48–வது நிமிடத்தில் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் சுவாரஸ் இன்னொரு பதில் கோல் அடித்தார். இதனால் உருகுவே அணி 2–2 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 86–வது நிமிடத்தில் உருகுவே வீரர் சுவாரஸ் கோலை நோக்கி அடித்த பந்தை பிரேசில் அணியின் கோல்கீப்பர் அலிசன் பெக்கர் அபாரமாக செயல்பட்டு தடுத்தார். முடிவில் இந்த ஆட்டம் 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 10 அணிகள் பங்கேற்றுள்ள தெற்கு அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் இதுவரை நடந்த 5 லீக் ஆட்டங்கள் முடிவில் ஈகுவடார் அணி (13 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. உருகுவே அணி (10 புள்ளிகள்) 2–வது இடத்திலும், பிரேசில் அணி (8 புள்ளிகள்) 3–வது இடத்திலும் உள்ளன.