ஐ.நா.வில் மசூத் அசாருக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை, சீனா நியாயப்படுத்துகிறது ஐ.நா.வில் மசூத் அசாருக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையிட்டதை சீனா நியாயப்படுத்தி உள்ளது.பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா, கடந்த பிப்ரவரி மாதம் முறையிட்டது. இந்தியாவின் முறையீடு தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ‘1267 குழு’ கடந்த 30–ந் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் மசூத் அசாரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பொருளாதார தடை விதிப்பதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் சீனா இதை ஏற்கவில்லை.
மசூத் அசார் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நினைத்ததை சாதித்து விட்டது. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனா, மசூத் அசார் மீதான நடவடிக்கையை தடுத்து நிறுத்தி விட்டது. பதன்கோட் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட மசூத் அசாருக்கு தீவிரவாதிக்கு உரிய தகுதி இல்லை என்று சீனா கூறியது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு தடை விதிக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் மறைமுக ரத்து அதிகாரம் பயன்படுத்தபடுவதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் ஐ.நா.வில் மசூத் அசாருக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையிட்டதை நியாயப்படுத்தி உள்ள சீனா, “நியாயம் மற்றும் உண்மைகளை அடிப்படையிலேயே எங்களுடைய நிலைப்பாடு இருக்கும்” என்று தெரிவித்து உள்ளது. நாங்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்று முதலை கண்ணீர் வடிக்கும் சீனா தொடர்ந்து ஐ.நா.வில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையிட்டு வருகிறது.