மதம் மாறிய பிக்பாஸ் ஜுலி
கேசவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ரா. தமிழன் புரொடக்ஷன்ஸ் சார்பில் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘அம்மன் தாயி’.
இதில் நாயகனாக அன்பு அறிமுகமாகிறார். படத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வரும் இவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்கான முயற்சியில் இருந்தார். இவருடைய உடல்கட்டமைப்பைப் பார்த்து ஹீரோ கேரக்டருக்கு மிகப்பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தில் நாயகியாகவும், அம்மன் தெய்வமாகவும் நடிக்கிறார் ‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி. சரண் என்ற புதுமுகம் அசத்தலான வில்லன் கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் மற்றும் பல புதுமுகங்கள்நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்கள் இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் – சந்திரஹாசன்.
அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் வெல்கிறார் ? என்பதே இப்படத்தின் கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியிலிருந்து அம்மன் எப்படி வருகிறார் என்பதை படத்தில் தனித்துவமாகக்காட்டியிருக்கிறார்கள்.
இப்படத்தில் ஜூலி நடிக்க ஒப்புக் கொண்டதே சுவாரஷ்யமான விஷயம் என்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் மகேஸ்வரன் – சந்திரஹாசன்.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, ”ஜூலி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் முதலில் இப்படத்தில் நடிக்கத் தயங்கினார். நான் அம்மன் கேரக்டருக்கு செட் ஆவேனா? என்றும் யோசித்தார்.ஆனால் போட்டோஷூட் எடுத்து அவரிடம் காட்டியதும் ஆச்சரியப்பட்டுப் போனார். அந்தளவுக்கு அம்மன் கேரக்டருக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருந்தார். அதன்பிறகு படத்தில் அம்மன் வேடத்தில்நடிப்பதற்காக எப்படி விரதமிருப்பது? எப்படி தெய்வங்களை வழிபடுவது ? இந்துக்களின் சாங்கிய, சம்பிரதாயங்கள் என்னென்ன ? என அத்தனையையும் தெரிந்து கொண்டார். அம்மன் சம்பந்தப்பட்டகாட்சிகள் படமாக்கப்படும் நாட்களில் ஒரு இந்துவாகவே மாறி முறைப்படி விரதங்கள் இருந்து காட்சிகளில் நடித்துக் கொடுத்தார்.
அதேபோல படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அம்மன் நடனம் ஆடிக்கொண்டே வில்லனை வதம் செய்யும் காட்சி ஒன்று உள்ளது. அதற்காகவும் முறைப்படி பயிற்சி எடுத்துக் கொண்டு தான் நடித்தார். அந்தளவுக்கு அவர் கதையோடும், கேரக்டரோடும் ஒன்றிப்போய் நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார் ” என்கிறார்கள்.
படத்துக்கு விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டிடி, பிரேம்குமார் சிவபெருமான் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜோன்ஸ் எடிட்டிங் செய்கிறார், கதை, திரைக்கதை, வசனம், எழுதி மகேஸ்வரன் – சந்திரஹாசன்இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் வடக்கம்பட்டி என்ற கிராமம் உள்ளது. தமிழ்சினிமாவுக்கு பல பிரபலங்களை தந்த இந்த கிராமத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. தமிழ்சினிமாவில் இதுவரை யாரும்படமாக்காத ஆந்திராவின் பைரவக்கோனா என்ற இடத்திலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ள நிலையில் படத்தின் தொழில்நுட்ப வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் சுமார் அரைமணி நேரத்துக்கு இடம்பெறும் சி.ஜிகாட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும்.
விரைவில் படத்தின் ஆடியோ வெளியாக உள்ள நிலையில் படத்தை அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலியின் முதல் அம்மன் அவதாரம் என்பதால் இப்போதே இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.