மார்ச் மாதம் முதல் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி – செங்கோட்டையன்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழகத்தில் திராவிடர் கழகம் இன்று போராட்டம் நடத்தி வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் கட்சியினர் தவிரப் பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நீட் தேர்வு பயிற்சி குறித்துத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

“நீட் தேர்வு பயிற்சிக்காகத் தமிழக மாணவர்கள் 72,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாகத் தமிழகத்தில் 10 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு ஒரு மையத்திற்கு 100 மாணவர்கள் வீதம் 1000 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 32 மையங்கள் அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளன. தற்போது வார இறுதி நாட்களில் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். பொதுத்தேர்வுகள் முடிந்ததும் நீட் பயிற்சி தினமும் அளிக்கப்படும். வருகிற மார்ச் மாதம் முதல் அனைவருக்கும் நீட் பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  இவற்றைத் தவிர அந்தந்த நீட் மையங்களின் மூலம் தமிழகத்தில் 2000 சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சென்னையில் நீட் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.