ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. சிபிஐ தொடுத்த இந்த வழக்கில் கார்த்திச் சிதம்பரம் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர், தன் மீதான லுக் அவுட் நோட்டீசை திரும்பப் பெறக்கோரி பலமுறை உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தும் அது தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், கடந்த நவம்பர் மாதம் தன்னுடைய மகளின் அட்மிஷனுக்காகத் தான் கண்டிப்பாக வெளிநாடு செல்ல வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் கார்த்தி மனு அளித்தார்.
இதனையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரும் கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை லண்டன் சென்று வந்தார். இந்நிலையில் தன்னைத் தொடர்ந்து வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கார்த்திக் கோரிக்கை விடுத்து வந்தார். இதனையடுத்துக் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கை உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது. வெளிநாட்டுக்குச் செல்ல கார்த்தியை அனுமதிப்பது தொடர்பாக இனி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.