போக்குவரத்து ஊழியர்களின் 7 நாள் ஊதியம் பிடித்தம்

ஊதிய உயர்வு, நிலுவை தொகை வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஜனவரி மாதம் 4ம் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தில் பேருந்து வசதி இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைக்கு பிறகு போக்குவரத்து ஊழியர்களின் இந்த பிரச்னையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு 3 மாதத்திற்குள் இதற்கு தீர்வு காணவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு லட்சம் ஊழியர்களின் 7 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “நாங்கள் எங்களது கோரிக்கைகளை வைக்கும் போது, போராட்டக் காலத்தில் எங்களது சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையையும் நீதிமன்றத்தில் வைத்தோம். அதற்கு நீதிமன்றமும் ஒப்புக்கொண்டது. எங்களது கோரிக்கை தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. சம்பளம் பிடித்தம் தொடர்பாக நாளை தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதை சட்டரீதியாக அணுகுவது தொடர்பாக கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.