அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவச் சிலைகளும் ஒரே பீடத்தில் நிறுவப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் சிலைகள் நிறுவ அனுமதி மறுக்கப்பட்டு வரும் சூழலில் இந்த சிலைகளை திடீரென திறந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அவிநாசி சாலையில் விழா பந்தல் அருகே இருந்த அண்ணா சிலை புனரமைக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, அந்த சிலை முழுவதுமாக மூடப்பட்டு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில் நேற்று எந்த பரபரப்பும் இன்றி அந்த பீடம் திறக்கப்பட்டது. சிலைகளுக்கு மாலை மட்டும் அணிவிக்கப்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை இருந்த இடத்தில் தற்போது கூடுதலாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் அமைத்துள்ளனர்.
நெடுஞ்சாலைகளில் சிலைகளை அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கெனவே இருந்த சிலையோடு, கூடுதலாக இரு சிலைகளை நிறுவியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ம்அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கேட்டபோது, ‘இந்த அண்ணா சிலை அதிமுகவால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 1996-ல் புனரமைத்தோம். கூடுதலாக சிலைகளை அமைக்க அப்போதே அனுமதியும் பெற்றுவிட்டோம். ஒரு நூல் அளவுகூட அதிக இடம் எடுத்துக் கொள்ளவில்லை. மற்றபடி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக நடப்பதால், சிலை திறப்புக்கு தனி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவில்லை’ என்றார்.
திமுக வழக்குஇதுகுறித்து திமுக எம்எல்ஏ நா.கார்த்திக்கிடம் கேட்டபோது, ‘நெடுஞ்சாலைகளில் சிலைகள் வைக்க அரசு அனுமதி கொடுப்பதில்லை. சென்னையில் திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட சிவாஜி சிலைகூட சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் முறையாக அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை தெரிந்து கொண்டு சட்டப்படி அணுகுவோம்.
மேலும், கோவையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கட் அவுட், பேனர்கள் அமைத்துள்ளதால் விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சேர்க்க உள்ளோம்’ என்று கூறினார்.