நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் இன்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாள்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளாராக களம் காண்கிறார். அதிமுக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் இன்று (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சீமான் உடன் வந்திருந்தார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலைக்கோட்டுதயம் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் எங்களுக்குப் போட்டியாக நாங்கள் யாரையும் பார்க்கவில்லை. எங்கள் தனித்துவத்தால் தமிழக அரசியலை மாற்ற முயல்கிறோம்.அரசியல் கட்சிகள் எங்கெல்லாம் தேர்தல் அலுவலகங்கள் அமைத்துள்ளனவோ அங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து துணை ராணுவப் படையினரை பணியமர்த்த வேண்டும். தேர்தலில் பணப்புழக்கத்தை தேர்தல் ஆணையம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைத்தால் வாக்குக்காக பணம் என்ற குற்றச்செயல் குறைந்துவிடும். அதைவிடுத்து, சாலையில் நின்று கொண்டு அப்பாவி மக்களின் அத்தியாவசியத் தேவைக்கான பணத்தை பறிமுதல் செய்வது சரியல்ல.அதேபோல் கடந்த தேர்தலின்போது ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையமே தெரிவித்திருந்தது. ஆனால், அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.